Advertisement

சீனாவுடன் நம் நெருக்கம் ஒரு பார்வை!

Share
தமிழகத்தின் மாமல்லபுரம் நம் தமிழ்க் கலாசாரத்தின் சிறப்பு மிகுந்த பல இடங்களில் முக்கியமானது. இங்கே நடந்த சீன அதிபர் ஸீ ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.இன்றைய நிலையில் சீன - இந்திய உறவு என்பது பழைய கணக்குகளில் இருந்து மாறுபட்டது. சீனாவின் அதிபர் ஜின்பிங் தன் நாட்டின் கம்யூனிஸ்ட் கருத்தில் ஊறித் திளைத்தவர் என்றாலும் அவர் சீனாவில் மாசே - துங் பார்வையில் இருந்து பொருளாதார வளம் கொழிக்க வேறுபட்ட சிந்தனை கொண்டவர். அதற்கு அவர் வாழ்வின் முன்னேற்றப் படிகள் அடையாளம். இன்று சீனாவின் பொருளாதார முன்னேற்றம் என்பதுடன் நம்மை ஒப்பிடும் போது நம் வளர்ச்சி குறைவு என்பதை கூற வேண்டியதில்லை. ஆனால் நம் உறவு அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் வலுப்படும் போக்கு இந்த பா.ஜ. தலைமையில் அமைந்த ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பில் வளர்ச்சிக்கான வகையில் வித்தியாசமான முறையில் பேச்சு நடத்தியிருக்கின்றனர். உடனே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன தலையீடு டோக்லாமில் சீன ஊடுருவல் போன்ற விஷயங்களை இத்தலைவர்கள் பேசினரா என்பது அர்த்தமற்ற பழங்கதை. இதை இன்று நினைவுபடுத்துவதும் தேவையில்லை.முந்தைய காலத்தில் 'பஞ்ச சீலம்' என்ற தத்துவத்தை பேசிய நம் பழைய கால தோல்வி இனி வருவதற்கான அறிகுறி இல்லை என்பதே முதல் வெற்றி. ஆனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்திய - சீன உறவு புதிய வளர்ச்சித் தடங்களில் செல்லும் என்று அதிபர் ஜின்பிங் கூறியதை உற்று நோக்கினால் பல புரிதல்கள் ஏற்படும்.தவிரவும் சீனாவின் வளம் என்பதை அடிப்படை தத்துவமாக கொண்ட ஜின்பிங் அதை அந்த நாடு 'தேசியவாதம்' என்பதை அந்த நாட்டின் ஒற்றுமை எனப் பார்க்கிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு தேசியவாதம் என்பதின் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் மோடியின் அழுத்தமான கோட்பாடு என்பதால் இரு தலைவர்களுடைய நெருக்கத்தின் அடிப்படை சிந்தனைகளில் ஒன்றாக கருதலாம்.மேலும் சீனாவின் கல்விக் கொள்கை தேசியத்தில் திளைத்த தன்மைகளைக் கொண்டது. சீனாவைப் பிளக்கும் கருத்துகள் அதில் முற்றிலும் ஏற்கப்படாதது. அதனால் மா சேதுங் கூறிய 'கல்சுரல் நேஷனலிசம்' என்ற கலாசார தேசியம் என்ற கருத்து இப்போது சீனப் பாடத்திட்டத்தில் கிடையாது. ஏனெனில் 140 கோடி கொண்ட சீனாவின் தேசியத்தில் எந்தக் கருத்தும் ஊடாட அனுமதிக்காத மாறுதலை உண்டாக்கியதில் ஜின்பிங் பங்கு அதிகம்.முந்தைய ஊகான் உச்சி மாநாட்டிற்கும் இன்றைய மாமல்லபுரத்தில் நடந்த மோடி - ஜின்பிங் சந்திப்புக்கும் உள்ள வித்தியாசம் இந்தியாவின் இறையாண்மை என்ற விஷயத்தில் அதிக அக்கறை காட்டும் அரசு இருக்கிறது என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியிருக்கக் கூடும். அதனால் சீனா விரும்பும் 'சில்க் ரூட்' என்ற கருத்தில் அமைந்த தெற்காசிய ஆதிக்க அணுகுமுறைக்குப் பதிலாக இந்தியா என்ற பெரிய ஜனநாயகம் இருப்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது.இல்லாவிட்டால் மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் ஆகியவற்றை பிரதமர் மோடி விளக்கியதை சீன அதிபர் உன்னிப்பாக கவனிப்பதும் தமிழக விருந்தோம்பலை அவர் பாராட்டுவதும் 'மீடியா'வில் அதிகம் இடம் பிடித்தது புதுமை.சீன அதிபர் தன் படம் பொறித்த பட்டு சால்வையை அவர் பெற்ற விதம் அதிக ஆர்வத்தை காட்டியது. ஆகவே அவர் இரு நாடுகளின் இறையாண்மை பாதிக்காத நட்புறவு வர்த்தக உறவு மேம்படும் என்றளித்த பேட்டி மற்ற விஷயங்களை பேசி மாறுபாடுகள் உள்ள உறவு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை என்பதின் அடையாளமாகும்.தவிரவும் இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்பட இரு நாட்டின் அமைச்சர்கள் இனி சந்திக்கும் வாய்ப்பும் அமைகிறது. இன்றைய நிலையில் சீனாவின் வர்த்தக மேம்பாடுகளால் அமெரிக்காவின் தனி ஆதிக்கத்தன்மை குறைகிறது என்று கருதும் காலத்தில் இந்தியாவின் 'வாங்கும் சக்தி'யை சீனா மேம்படுத்த விரும்புவது இயற்கையே. அதில் ஜனநாயக இந்தியா எப்படிப்பட்ட இரு நாட்டு வர்த்தக உறவுகளை அடுத்த 20 ஆண்டு களுக்கு எப்படி அணுகப் போகிறது என்பதை இனி அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம்.சீன - இந்திய உறவு உலக அரங்கில் அதிகம் பேசப்படும் விஷயமாகும் என்பதுடன் தெற்காசிய பகுதிகளில் சீனாவின் தனித்தன்மை மற்றும் ஆதிக்க ஊடுருவல் அதிகரிக்காமலும் இருக்க இந்த சந்திப்பு நிச்சயம் வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement