Advertisement

இரட்டை தலைமை சரியானதா?

Share
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், தற்போது திடீரென விடுமுறை எடுத்து, வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கும் காலம், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் உடன், நாடெங்கும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிற சமயமாகி விட்டது.ராகுல், தன் விருப்பத்திற்கு சில நாட்கள் ஓய்வாக விடுமுறை எடுப்பது அவர் வசதி என்பதும் அதை ஒரு விமர்சனமாக்கக் கூடாது என்றும் அக்கட்சியின் சீனியர் வழக்கறிஞர் சிங்வி கூறியது சரிதான்.


பொதுவாக ஒரு நிறுவனப் பொறுப்பு, அல்லது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் கூட தங்கள் விடுமுறைகளை முன்கூட்டியே அறிவிப்பதுடன், அதற்கான சில அவசர மாற்று ஏற்பாடுகளையும் செய்யா விட்டால், அது கேள்விக்குறியதாகி விடும். பல நேரங்களில், முக்கிய அரசியல் சம்பவங்கள் நடக்கும் இப்பெரிய நாட்டில், முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராக கருதப்படும் ராகுல், இம்மாதிரி அவசரப் போக்கை மேற்கொள்வதை வாடிக்கையாக்குகிறார். இதைச் சமாளிக்க, இப்போது ஒரு உத்தியாக, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் தனக்கு ஓட்டளித்த வாக்காளர்களை சந்திப்பதின் மூலம், விமர்சனத்தை தவிர்க்க முயல்கிறார்.


ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., முதல்வர்கள், இதனால், தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டும் உத்தி எளிதாகும். ஹரியானா, டில்லிக்கு அருகில் உள்ள மாநிலம். அதேபோல, தேசியவாத காங்கிரஸ், அங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, மஹாராஷ்டிராவில் போட்டியிட முயலும் வேளையில், ராகுல் முடிவை அங்குள்ள அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியுடன் பார்க்கின்றனர். அதேபோல, ராகுல், தன் பார்வையில் வைத்திருக்கும் மூத்த தலைவர்கள் குழுவைத் தாண்டி, மற்றொரு அணி கட்சிக்குள் உருவாகி விட்டது; இது தவறல்ல. கட்சிகளின் தலைமை பலவீனம் ஆகும் போது, அக்கட்சியில் உள்ள பலமிக்க தலைவர்கள் சிலர், அந்தந்த மாநிலங்களில் உள்ள செல்வாக்கு பெறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சி அல்லது அணி மாறுவது சகஜம்.

இதற்கான தடை அல்லது ஒழுங்குமுறையானது, சட்ட அடிப்படையில் வரவில்லை. நாடு முழுவதும் பெரிய கட்சிகள் என்று பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் இருந்தால், சிறிய கட்சிகள் 300 வரை இருக்கும். இதைச் சீராக்குவது தேர்தல் கமிஷன் வேலையா, அல்லது அரசா என்ற விவாதம் பலகாலமாக நடக்கிறது. அதை இப்போது இணைப்பது குழப்பத்தில் முடியும். ஹரியானாவிலும், மஹாராஷ்டிராவிலும், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய பிரமுகர்கள் குறித்த பின்னணி நமக்கு அவசியமில்லை. முன்பு, இந்திரா தனியாக காங்கிரஸ் கட்சியை இயக்கியகாலத்தில், அவரை எதிர்த்த நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் போன்றோர், பரிதாபமாக, 'சிண்டிகேட்' காங்கிரசாக மாறியது வரலாறு.

தமிழகத்தில் குமரி அனந்தன், காமராஜர் பெயரை பயன்படுத்தி, கட்சி ஆரம்பித்து இன்று மீண்டும் சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரசில் இருக்கிறார். தவிரவும் இன்றைய ராகுல் தலைமையை நேசிக்கும் நமது தமிழக தலைவர்களில், சிதம்பரம், ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். பா.ஜ., என்பது அதன் பின்புலமாக உள்ள சங்கபரிவார் பலத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதிலும் அதன் ஆர்.எஸ்.எஸ்., என்ற அரசியல் சாராத அமைப்பானது, அக்கட்சியில் சில முக்கியத் தலைவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. வாஜ்பாய், அத்வானி, மோடி, ராஜ்நாத் என்று அப்பட்டியல் நீளும்.

அப்படி பார்க்கும் போது, இன்று சோனியா மற்றும் ராகுல் ஆகிய இரட்டைத் தலைமை கட்சிக்கு வந்திருக்கிறது என்ற பார்வை, அரசியலில் ஒலிக்கிறது. அக்கட்சியில் இப்பிரச்னை, பத்தாண்டுகளில் மாநிலம்தோறும் வளர்ந்திருக்கிறது. கட்சியில், முறைப்படி அடிப்படை உறுப்பினர் சேர்க்கை, மாநிலத் தலைவர் தேர்வு வரை, கட்சித் தேர்தல் நடக்கவில்லை. நியமனத் தலைவர்கள் அல்லது பல்வேறு குழுக்களின் தலைவர்கள் நியமனம் என்பது ராகுல் காட்டும் பாதையாக இருக்கிறது.

மாநிலக் கட்சிகளில் வாரிசு அரசியல், நியமனத் தலைவர்கள் என்ற நிலை காணப்பட்டாலும், அக்கட்சிகள் எப்போது கரையும் என்பதை எளிதில் முடிவு செய்வது சிரமம். அதிக கல்வியறிவு, போக்குவரத்து வசதிகள், உணவு முறையில் மாற்றங்கள், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போக்கு கொண்ட இளைஞர்கள் அதிகரிக்கும் போது, கட்சியின் அடிப்படைகளில் ஆர்வம் காட்டி மட்டும் வாழ்வது, பலருக்கு சுமையாகி விடும். அரசியல் என்பது தொழிலா அல்லது சமூக சேவைக்கான சாதனமா என்ற திசையை நோக்கிச் செல்லும் போது, ராகுல் - சோனியா என்ற குடும்ப கலாசாரத்தின் இரட்டைத் தலைமை தொடர்ச்சி, அக்கட்சிக்கு அதிக அரசியல் வெற்றிகளை தர வாய்ப்பில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement