Advertisement

ஓட்டுனரை கொன்ற ஐவர் கைது

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், பலராமபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், பாஸ்கரன், 40; கார் ஓட்டுனர். இரு தினங்களுக்கு முன், ஆறு கும்பலால், கொலை செய்யப்பட்டார். வில்லிவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட, ரயில்வே தொழிற்சங்க தலைவரான, ஜே.கே.புதியவனை, 2018ல், பாஸ்கரன் கொலை செய்தார். இதற்கு, ஜே.கே.புதியவனின் அக்கா மகனான, சூரப்பேட்டையைச் சேர்ந்த, சுபாஷ், தன் கூட்டாளிகளான, சுகன், கேசவமூர்த்தி, செபாஸ்டீன், ஜெயஸ், சங்கர் ஆகியோருடன் சேர்ந்து, பாஸ்கரனை பழிதீர்த்தது தெரிய வந்தது. நேற்று, ஐந்து பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சங்கரை தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் எஸ்.ஐ., காயம்
அண்ணாசதுக்கம்: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில், சிறப்பு, எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர், வரதராஜ், 55. நேற்று காலை, அதே பகுதியில் உள்ள, பிளாக்கர்ஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், இவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். இதனால், காயமடைந்த வரதராஜ், ராயப்பேட்டை மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கணவருக்கு, 'காப்பு'
எண்ணுார்: எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர், செல்வகுமார், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி, லட்சுமி, 33; இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார், மது அருந்தி, தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து, லட்சுமி, எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.
கத்தியுடன் சுற்றியோர் பிடிபட்டனர்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் போலீசார், காலடிப்பேட்டை, ஓடியன்மணி தியேட்டர் அருகே, நேற்று முன்தினம் இரவு, ரோந்தில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகப்படும்படி சுற்றிய, ஐந்து பேரை பிடித்து சோதனை செய்ததில், 2 அடி நீளமுள்ள, இரண்டு கத்திகள் சிக்கின. இது தொடர்பாக, திருவொற்றியூரைச் சேர்ந்த, சுதாகர், 23, தனசேகர், 22, ராமச்சந்திரன், 34, முருகன், 22, சரவணன், 34, ஆகியோரை நேற்று கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றவர்களுக்கு, 'கம்பி'
ராயலாநகர்: ராயலாநகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, நடேசன் நகரில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர் ஒருவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா விற்ற, ராமாபுரத்தைச் சேர்ந்த, சந்துரு, 20, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 500 கிராம்கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.l பட்டினம்பாக்கம்: பட்டினம்பாக்கம்போலீசார், நேற்று மாலை, சீனிவாசபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். இதில், 5 கிலோ கஞ்சா, வாகனத்தில் பதுக்கி வைத்திருந்தது, தெரிய வந்தது. விசாரணையில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த, மணி, 36, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
எழும்பூர்: தரமணி, ராஜாஜி தெரு, எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர், திவாஹர், 31; சிறப்பு அதிரடி படை காவலர். எழும்பூர், சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் அருகே உள்ள, காவலர் குடியிருப்பில் தங்கி, வேலை பார்த்து வந்தார். இவருக்கு, ஜன., 25ம் தேதி, அனிதா, 25, என்பவருடன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக, திவாஹரை பிரிந்த அனிதா, குரோம்பேட்டையில் உள்ள, அவரது சகோதரர், துரைராஜ் வீட்டில் தங்கிஉள்ளார். அனிதாவை சேர்ந்து வாழ வருமாறு பலமுறை, திவாகர் அழைத்தார். அவர் மறுக்கவே, மனமுடைந்த திவாஹர், நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். அங்கு, தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலியல் புரோக்கர்கள் சிக்கினர்
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், வில்லேஜ் நெடுஞ்சாலையில் உள்ள, ஒரு வாடகை வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக, செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று முன்தினம், அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, ஒரு இளம்பெண்ணை வைத்து, பாலியல் தொழில் செய்து வந்த, ஈரோட்டைச் சேர்ந்த, பிரசாத், 24, பசுபதி, 20, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
முதியவருக்கு 2 ஆண்டு சிறை
பாரிமுனை: நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர், மணிமுத்து, 65. இவர், 2017ல், அதே பகுதியில், விளையாடிய, 6 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். விசாரித்த போலீசார், மணிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை, மகளிர் நீதிமன்ற நீதிபதி, ஆர்.என்.மஞ்சுளா முன் நடந்து வந்தது. நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மணிமுத்துவுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
லாட்டரி விற்றவர்கள் அகப்பட்டனர்
பல்லாவரம்: பல்லாவரம் போலீசார், நேற்று முன்தினம், திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில், லாட்டரி விற்ற, திரிசூலத்தைச் சேர்ந்த, மகாராஜா, 40, சசிகுமார், 40, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement