Advertisement

மாநகர துப்புரவு தொழிலாளர்களுக்கு புது வீடு! கட்டப்போகிறது குடிசை மாற்று வாரியம்

கோவை:கோவை, வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு, ரூ.32 கோடியில், தரைத்தளம் மற்றும் ஐந்து மாடிகளுடன் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப் போகிறது, குடிசை மாற்று வாரியம்.கோவையில், நீர்நிலைகளில் ஆட்சேபகரமான பகுதியில் வசிப்போருக்கு மாற்று வீடு கட்டிக் கொடுக்கிறது, குடிசை மாற்று வாரியம்.
மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன், குடிசை மாற்று வாரியம் மூலமாக, டவுன்ஹால் வெரைட்டி ஹால் ரோட்டில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. மொத்தம், 428 வீடுகளே இருந்தாலும், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.வீடுகளுக்கான தொகையை துப்புரவு தொழிலாளர்களது சம்பளத்தில் மாநகராட்சி பிடித்தம் செய்தது. முழுத்தொகையை செலுத்தியவர்களுக்கு, அவர்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறது.
குடியிருப்பு கட்டப்பட்டு, 30 ஆண்டுகளாகி விட்டதால், பழுதடைந்திருக்கிறது.சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து செங்கற்கள் வெளியே தெரிகின்றன. மாடி விடுகளில் பால்கனி சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. சுவற்றில் ஆங்காங்கே செடிகள் துளிர்விட்டுள்ளன. வசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் கன மழை பெய்தபோது, கோட்டை மேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து, பலர் உயிரிழந்தனர். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, குடியிருப்பில் இருப்பவர்களை காலி செய்ய, குடிசை மாற்று வாரியம் அறிவுறுத்தி வருகிறது.வீட்டை பழுது பார்த்துக் கொடுப்பதற்கு பதிலாக, அதே இடத்தில், தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.32 கோடியில், 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு வீடும், 400 சதுரடி பரப்பளவில் அமையும். சமையலறை, ஹால், படுக்கையறை, கழிப்பறையுடன் குளியலறை, பால்கனி வசதியுடன் அமையும். பயனாளிகளை உறுதி செய்ய, வீடுகளில் வசிப்பவர்களை போட்டோ எடுத்து, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கட்டுமான பணி துவங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்கின்றனர், அத்துறை அதிகாரிகள்.'அரசே முடிவெடுக்கணும்'குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வெரைட்டி ஹால் ரோடு, அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. அங்கு வசிப்பது ஆபத்தானது.
சீரமைத்துக் கொடுப்பதற்கு பதிலாக, புதிதாகவே கட்டிக்கொடுக்க இருக்கிறோம். கட்டுமான பணி முடியும் வரை, மைதானத்தில் கூடாரம் அமைத்து தங்குவதற்கான தொகை வழங்க, அரசுக்குகடிதம் எழுதியிருக்கிறோம். அரசே முடிவெடுத்து, நிதி ஒதுக்கவேண்டும்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அவர்களிடம் ஒரு தொகையை வசூல் செய்து கொண்டு வீடுகளை கொடுக்கலாம் இயன்றவரை இலவசங்களை தவிர்க்கலாம்

  • Diya -

    Is 30 years the life of the apartments?

Advertisement