Advertisement

அவதி! கூலி கிடைக்காமல் கைத்தறி நெசவாளர்கள்...அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நடுவீரப்பட்டு:கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கிற்கு நிவாரணமாக வழங்க கொள்முதல் செய்யப்பட்ட கைத்தறி துணிகளுக்கு, பணம் வழங்காததால், சங்கங்கள் நெசவாளர்களுக்கு கூலி பணம் கொடுக்கமுடியாத நிலை உள்ளது.

தமிழக அரசால், கடந்த 18 மாதங்களுக்கு முன், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கிற்கு, தமிழக அரசின் நிவாரணமாக கைத்தறி துணிகள் வழங்கப்பட்டது. இதற்காக, கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தில், கைலி, வேட்டி, சேலை, கொசுவலை, சட்டை துணிகள்,போர்வை, துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை, தமிழக அரசே, கைத்தறித்துறை மூலம் கொள்முதல் செய்து கேரளாவிற்கு அனுப்பி வைத்தது.கடலுார் கைத்தறி மற்றும் துணிநுால் துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதே போன்று வேலுார், ஈரோடு, விருதுநகர், மதுரை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள கைத்தறி சங்கங்களில், துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.இவைகளுக்கு பணம் வழங்கப்பட்டு விட்டதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கடலுார் கைத்தறி சங்கங்களுக்கு பணம் வழங்கவில்லை.தமிழக அரசிடமிருந்து, கடலுார் கைத்தறி மற்றும் துணிநுால் உதவி இயக்குனர் அலுவலகம், 2 கோடி பணத்தை பெற்றுத்தர எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு, நெசவாளர் சேமிப்பு பணத்தில் வட்டி கட்டி வருகின்றன. ஒரு சில கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அரசிடமிருந்து வர வேண்டிய பணத்தை நெசவாளர் சங்கங்களுக்கு பெற்று தராமல், அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.நெசவாளர் சங்கங்களுக்கு வட்டி சுமை ஏறுவதால், கைத்தறி நெசவாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில கைத்தறித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க, கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதிகாரிகளுக்கு உண்டான கமிஷனை தரவில்லையே என்னமோ அதனால்தான் தாமதமாகிறது

Advertisement