Advertisement

முன்னதாக தேர்தல் கிடையாது: பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு

லண்டன் : ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், பார்லி.,க்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என, பிரதமர், போரிஸ் ஜான்சன் கொண்டு வந்த தீர்மானம், மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்துவதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுக்காக உருவாக்கப்பட்ட, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற, பிரிட்டன் அரசு முடிவு செய்தது.'பிரெக்சிட்' என்றழைக்கப்படும் இந்த முயற்சி தொடர்பாக, பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, 2016ல் ஓட்டெடுப்பு நடந்தது.'பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகள் துவங்கின.வரும், அக்., 31க்குள் வெளியேறுவதற்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள, 28 நாடுகள், பிரிட்டனுக்கு காலக்கெடு விதித்துள்ளன.

இந்நிலையில், 'எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறக் கூடாது அல்லது பிரெக்சிட் காலக்கெடுவை, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு, இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்ததுடன், ஆளும் கட்சியில் உள்ளவர்களும் இதற்கு ஆதரவு அளித்ததால், 'எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறக் கூடாது' என்ற எதிர்க்கட்சிகளின் திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேறியது.

இது, சட்டமாகவும் வந்துள்ளது.இது, பிரெக்சிட் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாலும், பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாததாலும், பிரதமர், போரிஸ் ஜான்சன், பார்லி.,யை முடக்கி வைத்தார்.மேலும், அக்., 15ல், பார்லி.,க்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.இதற்கான தீர்மானம், பார்லி.,யில் நிராகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம், இந்த தீர்மானம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement