Advertisement

உணவில் புழு: முருகன் இட்லி கடை சமையல் கூடத்தின் உரிமம் ரத்து

அம்பத்துார் : பிரபல ஓட்டலின் சாப்பாட்டில் புழுக்கள் கிடந்த புகார் காரணமாக, அந்த ஓட்டலின் உணவு தயாரிக்கும், சமையல் கூடத்திற்கான உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுக்க பல கிளைகளை கொண்டது, பிரபலமான முருகன் இட்லி கடை. சென்னையில், அந்த நிறுவனத்தின் ஓட்டல்களுக்கு, அம்பத்துார் தொழிற்பேட்டை, இரண்டாவது தெருவில் உள்ள, சமையல் கூடத்தில் இருந்து தான், உணவு தயாரிக்கப்படுகிறது.அங்கு ஏற்கனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலை இருந்துள்ளது. சமையல் கூடத்தில், பூச்சி கட்டுப்பாட்டு முறைகளும் சரியாக பின்பற்றவில்லை.மேலும், சமையல் கூடத்திற்கான, தரக் கட்டுப்பாடு சான்றும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்னைகளை சீரமைக்கக் கோரி, உணவு பாதுகாப்பு துறையினர், எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த நிறுவனம் அலட்சியப்படுத்தி உள்ளது.இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள, முருகன் இட்லி கடை ஓட்டலில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், 7ம் தேதி, பகல் உணவு சாப்பிட்டிருக்கிறார்.அதில், நன்கு வளர்ந்த புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்திருக்கிறார். மேலும், சுகாதாரமற்ற உணவு குறித்து, 'வாட்ஸ் ஆப்' செயலி மூலம், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் செய்தார்.

இதையடுத்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், முருகன் இட்லி கடை சமையல் கூடத்தில், ஆய்வு செய்தனர்.ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், சுகாதாரமற்ற நிலையில் இருந்த, சமையல் கூடத்திற்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்; அதற்கான அறிவிப்பை அங்கு ஒட்டினர்.மேலும், உரிய விளக்கம் அளிக்கும் வரையில், இந்த சமையல் கூடத்தில், உணவு தயாரிக்கக் கூடாது என, எச்சரித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • sivam - baghram,ஆப்கானிஸ்தான்

  ஆமா அதா சாப்பிட்டு தான் இவர் சாகப்போகிறாரா ? ஏற்கனவே அது தான் வெண்ணித்தண்ணில செத்து போயிருச்சு இன்னும் என்ன வேணும் ?

 • muthu Rajendran - chennai,இந்தியா

  இது போன்ற தவறுகள் பல கிளைகள் உள்ள உணவு விடுதிகளில் தான்(chain of hotels) ஏற்பட வாய்ப்பு உள்ளது இனிப்பு காரம் தவிர அன்றாடம் பரிமாறப்படும் சாப்பாடு , சிற்றுண்டி வகைகளை அந்தந்த கிளைகளில் தான் தயாரிக்க பட வேண்டும் என்று கட்டாய படுத்தினால் இது போன்ற சீர்கேடுகள் குறைய வாய்ப்புள்ளது. பல கிளைகள் உள்ள நிறுவனங்கள் விற்காத கிளைகள் பொருள்களை அடுத்த கிளைகளுக்கு விநியோகம் செய்வதாலும் ஒரே இடத்தில் மிகப்பெரிய அளவில் உணவு பொருள் தயார் செய்யும்போதும் அலட்சியத்திலும் இது போன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஒரு பக்கம் சுகாதாரத்தை சோதனை செய்வதுடன் இன்னொரு பக்கம் விலையையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.சென்னையில் முதன்முறையாக பல கிளைகள் திறந்த 'உயர்தர சைவ "ஹோட்டலில் குளிர் சாதனா வசதியில்லாத ஹாலில் 100 கிராம் பொங்கல் 90 ரூபாய்க்கு விற்கிறார்கள் ஜி எஸ் டி வேறு தனி . ஒரு காபி நாற்பது ரூபாய்க்கு எட்டி பிடிக்கிறது மிலிட்டரி ஹோட்டலில் இருநூறு ரூபாய்க்கு பிரியாணி கிடைக்கும்போது ஒரு பொங்கல் ஒரு வடை காபிக்கு 190 ரூபாய் ஆகிறது. சாதாரண ஹோட்டலில் ஐந்து நட்சத்திர வசதி ஹோட்டல் விலைக்கு சிற்றுண்டிகளை விற்கும் போக்கிற்கு அரசு தான் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் நடுத்தர மக்கள் உணவருந்தும் வகையில் உணவு பூங்கா (food court) அமைத்து பல தரப்பினருக்கும் நியாயமான விலையில் சுகாதாரமான உணவை விற்க அனுமதிக்க வேண்டும். ஹைதராபாதில் லும்பினி பார்க்கில் இது போன்று உணவு பூங்கா உள்ளது.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  புழுங்கல் அரிசிக்கு பதிலா புழுக்கள் அரிசியை பாவிச்சிருக்காங்க.

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  இது நம் நாட்டில நடவடிக்கை , வாழ்த்துக்கள் , அப்படியே எல்லா ஓட்டல்களுக்கு போங்க ,

 • RAJAN - chennai,இந்தியா

  இதனால சகல விதமானவர்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், நீங்கள் இனிமேல் உணவகங்கள் (ஓட்டல்கள்) நேரிடையாக செல்ல வேண்டாம், எல்லாமே உங்களுக்கு உங்கள் வீட்டிற்கே (டோர் டெலிவரி) வந்து சேரும். அதற்குத்தான் ஆப்பு (சுக்கி, ஊபர் இன்னும் பல) வைத்திருக்கிறீகள். நீங்கள் உணவகங்களுக்கு நேரிடையாக செல்வதால் இதுபோல சிரமங்களை காண நேரிடுகிறது. ஆப்பு மூலம் ஆர்டர் செய்வதால் சொந்த செலவில் உங்களுக்கே ஆப்பு (உடல் நலத்திற்கு) வைத்துக்கொள்ளலாம் . அதுக்குதான் புதுசு புதுசா கண்டுபிடிச்சி வைக்கறாங்க.... நன்றி

Advertisement