Advertisement

நவீனமயம்! முப்படைகளுக்கு புதிய ஆயுதங்கள்; 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் தயார்

புதுடில்லி: அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், முப்படைகளை வலுப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, அடுத்த ஏழு ஆண்டுகளில், 9.34 லட்சம் கோடி ரூபாய் செலவில், புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கான திட்டங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி களில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல், தொடர்ந்து இருந்து வருகிறது. எல்லையை பராமரிக்கும் வகையிலும், அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையிலும், முப்படைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

கோரிக்கை:



பாக்.,கும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அதனால், இரு நாடுகளையும் சமாளிப்பதற்காக, நம் படைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஏழு ஆண்டுகளில், 9.34 லட்சம் கோடி ரூபாய் செலவில், முப்படைகளை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ராணுவ அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: முப்படைகளையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நீண்ட நாள் கோரிக்கையான, 'முப்படைகளை ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மூன்று படைகளுக்கும் தேவையான, ஆயுதங்கள், தளவாடங்களின் தேவை குறித்து தெரிவிக்கவும், அவற்றை விரைவாக பெறவும் முடியும். முப்படைகளை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான விரிவான திட்டத்தை, ராணுவ அமைச்சகம் வகுத்துள்ளது.

முயற்சி:



அதன்படி, புதிதாக ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள் போன்றவற்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. முப்படைகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்நாட்டில் உற்பத்திக்கான முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தேவை என்ன?



ராணுவ அமைச்சக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சீனா, தன் கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்தி வருகிறது. அதனால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், 200 கப்பல்கள், 500 விமானங்கள், 24 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாக, நம் கடற்படையை வலுப்படுத்த வேண்டும். தற்போது, கடற்படையிடம், 132 கப்பல்கள், 220 விமானங்கள், 15 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன.

அதேபோல், விமானப் படைக்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும், 'அக்னி - 5' ஏவுகணையை படையில் சேர்ப்பதும் அதில் ஒரு திட்டமாகும். இந்த ஏவுகணை, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 5,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. தற்போதைக்கு, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், வட கொரியாவிடம் மட்டுமே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. தற்போது, நம்மிடம், 700 கி.மீ., பாயும் அக்னி - 1; 200 கி.மீ., பாயும் அக்னி - 2; 2,500 முதல், 3,500 கி.மீ., பாயும் அக்னி - 3 மற்றும் அக்னி - 4 ஏவுகணைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • blocked user - blocked,மயோட்

    ஒரு நாடு சிறப்பான நிலையில் இருக்க அந்த நாட்டின் இராணுவம் பலம் பொருந்தியதாக இருக்கவேண்டும்.

Advertisement