Advertisement

காஷ்மீர் ஆப்பிள்கள் கொள்முதல்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில் விளைவிக்கப்படும் ஆப்பிள்களை, விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யும். இதற்கான பணம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து அங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் விளைவிக்கப்படும் ஆப்பிள்கள், உலகப் புகழ் பெற்றவை. 'காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளில் விற்பதற்காக, தினமும், 750 டிரக் ஆப்பிள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், 'ஆப்பிள்களை விற்கக் கூடாது' என, விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பாக்., ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சோபூரைச் சேர்ந்த, ஆப்பிள் வியாபாரியை, பயங்கரவாதிகள் மிரட்டிஉள்ளனர். அதையும் மீறி, அவர் ஆப்பிள் விற்பனை செய்துள்ளார்.

அதையடுத்து, அவருடைய வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதிகள், அவருடைய மகன், இரண்டரை வயது பேத்தி ஆகியோரை, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருவரும் பலத்தக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக ஆப்பிள் கொள்முதல் செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'நபெட்' எனப்படும், தேசிய வேளாண் கூட்டுறவு வர்த்தகக் கூட்டமைப்பு மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும்.

வங்கிக் கணக்கு:ஜம்மு - காஷ்மீரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், சோபூர், ஷோபியான் மற்றும் ஸ்ரீநகரில் அமைந்துள்ள மொத்த கொள்முதல் நிலையத்தின் மூலமும், கொள்முதல் நடத்தப்படும். தரம் வாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இந்த கொள்முதல், டிச., 15க்குள் முடிக்கப்படும். இதற்கான நியாயமான கொள்முதல் விலையை, தேசிய தோட்டக்கலை வாரிய உறுப்பினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நிர்ணயிக்கும். தரத்தை நிர்ணயம் செய்யும் குழுவும் அமைக்கப்படும்.

மாநில அளவில், இதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, ஜம்மு - காஷ்மீர் தலைமைச் செயலர் இருப்பார். மத்திய வேளாண் அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்தக் குழுவில் இடம்பெறுவர். விவசாயிகளுக்கான கொள்முதல் விலை, நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மிரட்டல் பயங்கரவாதிகள் கைது:காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூரில், 'இந்திய அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும்' என, உள்ளூர் மக்களை மிரட்டியதுடன், அது தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டியதாக, பாக்.,கைச் சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, எட்டு பயங்கரவாதிகள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடும் கட்டுப்பாடுகள்:காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில், ஊரடங்கு உத்தரவுக்கு இணையான, கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் அனுசரிக்கும், மொகரமை ஒட்டி பேரணிகள் நடத்துவதை தடுக்கும் வகையில், இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீரில், 1990ல் இருந்து, மொகரம் பேரணிகள் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணியின்போது வன்முறை தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  'ஆப்பிள்களை விற்கக் கூடாது' என, விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பாக்., ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து???இப்பொழுது தெரிந்ததா இன்னாள் வரை யார் நிஜமாக காஷ்மீரில் ஆட்சி புரிந்தார்கள் என்று முஸ்லீம் நேரு காங்கிரஸினால்???

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  விவசாயிகள் , வியாபாரிகள் ஆப்பிள்களை விற்றுத்தான் வாழ்க்கையை நடத்த முடியும் , இந்த தீவிரவாதிகள் தான் பாகிஸ்தானிடம் இருந்து எச்சில் எலும்பு துண்டை பெற்று வாழ்கிறார்கள். இவர்களை கூடிய விரைவில் ஒழித்துக்கட்டினால் தான் பொது மக்களுக்கு நிம்மதி.

 • ருத்ரா -

  புதிய இந்திய சுதந்திரத்தை சுவாசித்த ஆப்பிள்கள் அதிக ருசி தரும். Health, wealth நம் காஷ்மீர் தேவ தரு (மரம்) .

 • vasumathi - Sindhathari Pettai ,இந்தியா

  மிக்க நல்லது. தமிழ் நாட்டில் நெல் அரசு கொள்முதல் சரி இல்லை என்று விவசாயிகள் சொல்கின்றனர். தமிழக அரசும் செய்ய வேண்டும்.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  சிம்லா ஆப்பிளை விட காஷ்மீர் ஆப்பிள் சுவை அதிகம் .. நிலத்திலேயே பள்ளம் தோண்டி ஆப்பிள்களை புதைத்து இயற்க்கை குளிர் சாதனம் செய்யும் பழக்கம் சோபியான் போன்ற பகுதிகளில் சர்வ சாதாரணம் ..அந்த ஆப்பிள்கள் இன்னும் சுவையாக இருக்கும் ...

Advertisement