Advertisement

ஜெயில்: இரண்டு பேருக்கும் ஒரே ராசி!

''தோப்பனாருக்கும், மகனுக்கும் எண் கணித ராசி, ஒற்றுமையா இருக்கு போங்கோ...'' என்றபடியே, பெஞ்ச் ஜமாவில் சங்கமித்தார், குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்குல சிக்கி, டில்லி திஹார் ஜெயில்ல அடைக்கப்பட்டிருக்காரே, சிதம்பரம்... இவரது பிறந்த நாள், செப்., 16... இவரது மகன் கார்த்தியின் பிறந்தநாள், நவ., 16... ''இதனால, ரெண்டு பேருக்குமே, ராசியான நம்பர், ஏழு தானாம்... இவங்க குடும்ப வாகனங்களின் கூட்டு தொகை எல்லாமே, ஏழுன்னு தான் இருக்கு ஓய்...

''இந்த எண் ராசி, ஜெயில் வரைக்கும் தொடர்றது... இப்ப, சிதம்பரம் அடைக்கப்பட்டிருக்கிறது, 7ம் நம்பர் ஜெயில் தான்... இதே ஜெயில்ல தான், இதுக்கு முன்னாடி, இவரது மகனையும் அடைச்சிருந்தார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''காதும் காதும் வச்ச மாதிரி இருந்த விஷயத்தை, பகிரங்கப்படுத்திட்டார்னு, அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''யார் மேல, யாருங்க அதிருப்தியில இருக்கிறது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல, ரேஷன் கடைகளை நடத்துறது தான், கூட்டுறவு துறையின் வேலை... ரேஷன் பொருட்களை வாங்குறது, கடைகளுக்கு ஒதுக்குறது, ரேஷன் செயல்பாட்டை கண்காணிப்பது எல்லாம், உணவுத் துறையின் வேலை... ''மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை துவங்கியிருக்குல்லா... இந்த திட்டத்துல, எந்த குழப்பமும் இல்லாம, தமிழகத்தை சேர்க்கணும்னு, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு பண்ணி, அதை ரகசியமாகவும் வச்சிருந்தாவ வே...

''ஆனா, சென்னையில ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, 'தமிழகத்துல, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்'னு, 'பட்'டுன்னு அறிவிச்சிட்டாரு... உடனே, எதிர்க்கட்சியினர், அரசை வசைபாடி, அறிக்கை மேல அறிக்கை விட, உணவு துறை அதிகாரிகள், அமைச்சர் மேல கடுப்புல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எல்லா அமைச்சர்களும் வெளிநாடு போயிட்டு வராங்களே... என்ன விசேஷமாம் பா...'' என, திடீரென கேட்டார், அன்வர் பாய்.

''அதைப் பத்தி அவங்களிடம் தான் கேட்கணும்... ஆனா, இந்த வரிசையில, துணை முதல்வர் பன்னீர்செல்வமும், சேரப் போறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''அதாவது, குறைஞ்ச செலவுல, ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுறது, அதுல நவீன வசதிகள் செய்றது, வெளிநாட்டு மார்க்கெட், பஸ் நிலையங்கள் மாதிரி, கோயம்பேடு மார்க்கெட், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துறது சம்பந்தமா, ஆய்வு செய்ய இருக்காருங்க...

''இதுக்காக, சீனா, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு போற மாதிரி திட்டம் வகுத்திருக்காங்க... முதல்வர், இ.பி.எஸ்., பயணத்துல, பத்திரிகையாளர்களை தவிர்த்துட்டாங்க... ஆனா, 'துணை முதல்வர் பயணத்துல, பத்திரிகையாளர்கள் சிலரையும் அழைச்சுட்டு போவார்'னு கோட்டை வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

பெரியவர்கள் கிளம்ப, நாயர், வியாபாரத்தை கவனிக்க எழுந்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதை எத்தனையோபேர் எத்தனையோ விதத்தில் விமர்சித்தாலும், பஸ் ஸ்டாண்ட் பார்க்க Singapore போறாராம், ஒருத்தர் மாடு 70 லிட்டர் கறக்குது என்கிறார். அங்கு மேய்ச்சல் நிலங்களை எப்படிப் பராமரிக்கிறார்கள், இங்கானால் ரோடு போட எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டு, மாடுகளை கொலைப்பட்டினி போட்டு, மாடு பாலாகப் பொழியுமா சும்மா வரிப்பணத்தில் உலகம் சுற்றப் போய்விட்டு, (ரகசியமாக சிகிச்சை வேறு ) வாய் ஜாலம் செய்வதுதான் நடக்கிறது

  • Kalyanaraman -

    அந்தக் காலத்திலிருந்தே தமிழன் கட்டடக்கலை, நீர்மேலாண்மை உட்பட எல்லாத் துறையிலும் உச்சத்தை தொட்டிருக்கிறான். நீர்மேலாண்மை பற்றி அறிய எடப்பாடி இஸ்ரேல் போனாராம். இப்போ இவர் கட்டடக்கலை பற்றி அறிய வெளிநாடு போறாராம். நடத்துங்க. உங்க சொந்தப் பணமா என்ன? மீதி இருக்குற 20 மாதத்துல இப்படி ஒவ்வொருத்தரா போயிட்டு வாங்க. சாதாரண பொதுஜனம் பஸ்ஸில் போகக்கூட யோசிக்கிற அளவுக்கு மோசமான ஆட்சி நடத்திக்கிட்டு நீங்க எங்க வரிப்பணத்துல மஞ்சள் குளிங்க.

  • kalyanasundaram - ottawa,கனடா

    IT IS NOT NECESSARY FOR THESE MINISTERS TO GO ABROAD UTILIZING PUBLIC FUNDS. THEY MUST HAND OVER SUCH PLANS TO REALLY INTELLIGENT, QUALIFIED AS WELL TRUST WORTHY PUBLIC INTERESTED IN STATES WELFARE. PROBABLY THESE MINISTERS ARE MAKING THE SLOGAN " NAANUM AMERICA PARKAVENDAMA" A REALISTIC. IN INDIA LOTS OF CAPABLE AND EDUCATED PEOPLE WITH NATIONAL INTEREST ARE THERE. BUT BY SUCH MINISTERS PUBLIC FUNDS ARE MISUSED.

Advertisement