Advertisement

இணைந்த கைகள்! நம்ம நவக்கரையால் நிரம்பியது ஊரணி

கோவை:கோவையில் வசிக்கும் பொதுமக்களிடம் நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், நீர் நிலைகளை துார்வாரி, சுத்தப்படுத்தி வருகின்றனர்.
'நம்ம நவக்கரை' குழுவினர், புதர்மண்டியிருந்த ஊரணியை சுத்தம் செய்து, துார்வாரி, தண்ணீர் தேக்கியுள்ளனர். சரவணம்பட்டியில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், வண்ணான்குட்டையை துார் எடுக்க, தன்னார்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.சமீபகாலமாக, நீர் நிலைகள் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஏரியாவிலும் குழுக்களாக இணைந்து நீர் நிலைகளை மீட்டெடுத்து வருகின்றனர்.
குறிச்சி குளத்துக்கு வரும் நீர் வழித்தடத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சியை, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர். வெள்ளலுார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான தடைக்கற்களை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அகற்ற பெரும் முயற்சி எடுத்தனர்.
சின்ன வேடம்பட்டியை ஏரியை சீரமைக்கவும், ஆச்சான்குளத்தை மீட்டெடுக்கவும் தன்னார்வலர்கள் ஓரணியில் திரண்டு பணியாற்றி வருகின்றனர்.நம்ம நவக்கரைஇதேபோல், தமிழக - கேரள எல்லையான, நவக்கரை பகுதியில், 'நம்ம நவக்கரை குழுமம்' உருவாகியுள்ளது. இக்குழுவை சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை சமுதாய சேவை செய்ய திட்டமிட்டனர்.
திருவள்ளுவர் நகரில் இருந்த ஊரணி புதர்மண்டி இருந்தது. இது, 100 அடி நீளம், 50 அடி அகலம், 13 அடி ஆழம் கொண்டது. நீர் வரத்தின்றி காணப்பட்டது. கடந்த ஆண்டு, புதரை அகற்ற ஆரம்பித்தனர். அசராமல் ஒவ்வொரு வாரமும் பணியாற்றினர். இவர்களது ஆர்வத்தை பார்த்து, நவக்கரை மக்களும் கை கோர்த்தனர்.செடி கொடிகள் அகற்றப்பட்டு, பொக்லைன் வாகனங்களால் துார்வாரப்பட்டு, தண்ணீர் தேக்குவதற்கு, கடந்த மே மாதம், ஊரணி தயாரானது. இவர்களது முயற்சிக்கு கிரீடம் வைப்பதை போல், சமீபத்தில் பெய்த கன மழைக்கு, ஊரணி நிரம்பி வழிந்தது. இரு கரையிலும் மரக்கன்று நடும் வேலையையும் துவக்கியுள்ளனர். 'மியாவாக்கி' முறையில் குறுங்காடு உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.குட்டைக்கு நல்ல காலம்! இதேபோல், சரவணம்பட்டி இ.பி., காலனியில் உள்ள வண்ணான்குட்டையை துார் எடுக்கவும், மழைநீர் சேகரிப்புக்கு ஏற்ற நீர்நிலையாக மாற்றவும் தன்னார்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவராஜா கூறுகையில், ''வண்ணான்குட்டையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வாரம், துார் எடுக்க இருக்கிறோம். அப்பகுதியில் வசிக்கும் மக்களும், உதவி செய்வதாக கூறியுள்ளனர். குட்டையில் இருக்கும் மண்ணை கொண்டும், ஆழப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மண் கொண்டும், வலுவான கரை அமைக்க முடியும். இப்பகுதியில், 6 ஏக்கரில் தண்ணீர் தேக்கினால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் கணிசமாக உயரும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement