Advertisement

முதல்வர் உத்தரவை மதிக்காத பொறியாளர்கள்!

Share
முதல்வர் உத்தரவை மதிக்காத பொறியாளர்கள்!


''அத்தி வரதரால, பக்தர்களுக்கு புண்ணியம் கிடைச்சதோ, இல்லையோ, அதிகாரிகளுக்கு நன்னாவே வரும்படி கிடைச்சிடுத்து ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.''விளக்கமா சொல்லு வே...'' என்றார் அண்ணாச்சி.''காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில்ல, அத்தி வரதர் வைபவம், 48 நாட்கள் நடந்துச்சோல்லியோ... இதுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் தரப்புல செஞ்சிருந்தா ஓய்...''அதே நேரம், கழிப்பறை, குடிநீர், புதிய சாலை வசதி உள்ளிட்ட பணிகளை, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்புல செஞ்சிருந்தா... இதுக்காக, மாவட்ட நிர்வாகம், கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செஞ்சது... ஆனா, பணிகளை ஏனோ தானோன்னு ஒப்புக்கு செஞ்சுட்டு, நகராட்சி அதிகாரிகள் பலர், லட்சக்கணக்குல கமிஷன் பார்த்துட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''விடும்... அவங்களை எல்லாம், அத்தி வரதர் பார்த்துக்குவாரு வே...'' என்ற அண்ணாச்சியே, ''வடசென்னை, தி.மு.க.,வுல கோஷ்டி கானம் ஓங்கி ஒலிக்குல்லா...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்.''அங்க என்ன பஞ்சாயத்து பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க., வடசென்னை வடக்கு மாவட்டச் செயலர், மாதவரம் சுதர்சனம், ஒரு அணியாகவும், பெரம்பூர் எம்.எல்.ஏ., சேகர், மற்றொரு அணியாகவும் செயல்படுதாவ...''சுதர்சனத்துக்கு எதிரான கோஷ்டி, வடசென்னை கட்சி நிகழ்ச்சிகளுக்கு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவனை, சிறப்பு விருந்தினரா வரவழைக்கு வே...''இவங்களும், மாவட்டச் செயலரிடம் தெரிவிக்காம, நிகழ்ச்சிகளுக்கு வந்துட்டு போயிடுதாவ... இது சம்பந்தமா, ஏற்கனவே ஸ்டாலின் வரை புகார் போய், ஆறு மாசமா, அவங்க, வடசென்னை பக்கம் தலைகாட்டாம இருந்தாவ வே...''இப்ப, மறுபடியும் சேகர் அழைப்பை ஏத்துக்கிட்டு, ரெண்டு பேரும், வடசென்னையில வலம் வராவ... மாவட்டச் செயலருக்கு எதிரா கெத்து காட்ட, சேகர் தரப்பும், 20 - 30 ஆயிரம் ரூபாய்னு பணத்தை செலவழிச்சு நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணுது வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''முதல்வர் உத்தரவையே காத்துல பறக்க விட்டுட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அந்தோணிசாமி.''யாரு வே அது...'' என, விசாரித்தார், அண்ணாச்சி.''டெல்டா மாவட்ட பாசனத்துக்காக, மேட்டூர் அணையில தண்ணீர் திறந்திருக்காங்களே... கடைமடை பகுதிக்கு தண்ணீர் போறதை உறுதிப்படுத்த, பல மாவட்டங்கள்ல இருக்கிற, பொதுப்பணித் துறையின், 60 பொறியாளர்களை, 12ம் தேதி முதல்வர், இ.பி.எஸ்., நியமிச்சாருங்க...''இவங்க எல்லாருமே, வர்ற, 30ம் தேதி வரை, டெல்டாவுல தங்கி, வேலை பார்க்கணும்னு உத்தரவு... ஆனா, 40 பொறியாளர்களுக்கு மேல, அங்க போகவே இல்லைங்க...''தங்களது சொந்த பணத்துல தங்கி, சாப்பிடணும்கிறதால, பழைய இடத்துலயே இருக்காங்க... இதை கேள்விப்பட்டு, முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கொதிச்சு போயிட்டாருங்க...''உடனே, டெல்டா மாவட்டங்களுக்கு போகாத பொறியாளர்கள் மேல நடவடிக்கை எடுக்கப் போறதா நோட்டீஸ் விட்டாருங்க... ஆனா, முதல்வர் உத்தரவையே மதிக்காத பொறியாளர்கள், அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலைங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.


தில்லுமுல்லு போலீசாருக்கு அரசு தந்த விருது!


''யாரும் வாழ்த்து சொல்ல வர வேண்டாம்னு சொல்லிட்டார் ஓய்...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்து வைத்தார்,குப்பண்ணா.''யாருவே இப்படி சொன்னது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, சமீபத்துல, 45வது திருமண நாள் வந்தது... இதுக்கு வாழ்த்து சொல்ல, அவரது உதவியாளர்கிட்ட, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரம் கேட்டு இருக்கா...''ஆனா, 'யாரும் வர வேண்டாம்'னு ஸ்டாலின் தடாலடியா சொல்லிட்டாராம்... அன்னைக்கு காத்தால, கோபாலபுரத்துக்கு, மனைவி துர்காவோட போய், அம்மா தயாளுவிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கார் ஓய்...''அப்பறமா, வீட்டு வேலையாட்கள் வாழ்த்துகளை மட்டும் ஏத்துண்டு, அவாளோட போட்டோவும் எடுத்துண்டாராம்... ராத்திரி, மகன், மகள், மருமகள், மருமகன், பேரக் குழந்தைகளோட, கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு போய், விருந்து சாப்பிட்டுட்டு வந்திருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''மண் அள்ளுனதுல ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்காம் பா...'' என்றார் அன்வர்பாய்.''எங்கங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கன்னியாகுமரி மாவட்ட குளங்கள்ல மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி குடுத்தாங்க... இதுல, ஏகப்பட்ட முறைகேடு நடந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, நிறைய மண்ணை தோண்டி எடுத்துட்டு போயிட்டாங்க பா...''இது சம்பந்தமா புகார்கள் குவிஞ்சதால, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் குழு, மாவட்ட பொதுப்பணித் துறை அலுவலகத்துல, ரெண்டு நாள் ரகசிய சோதனை நடத்தி, மண் அள்ளிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பறிமுதல் செஞ்சிருக்காங்க...''விசாரணையில, அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட குளங்கள்ல தான், அதிக அளவு மோசடி நடந்திருக்கிறதா தெரிஞ்சிருக்கு... அந்த பகுதி வருவாய் துறை அதிகாரியிடம் விசாரணை நடத்துவாங்கன்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''அனில்குமார், ஊர்ல இருந்து எப்படே வந்த...'' என, எதிரில் வந்த வாலிபரிடம் விசாரித்த அண்ணாச்சியே, ''தில்லுமுல்லுல, கரை கண்டவங்களுக்கு போய், விருது குடுத்துருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.''சிறப்பா பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு, சுதந்திர தினத்தை ஒட்டி, மத்திய - மாநில அரசுகள் விருதுகள் அறிவிக்கும்... புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மத்திய அரசு விருதும், திருச்சியில வேலை பார்த்த ஒரு இன்ஸ்பெக்டருக்கு, மாநில அரசு விருதும் அறிவிச்சிருக்காவ வே...''இதுல, புதுக்கோட்டைக்காரர், சில வருஷங்களுக்கு முன்னாடி, திருச்சியில, எஸ்.ஐ.,யா இருந்தப்ப, லாரிகளை நிறுத்தி, வசூல்ல ஈடுபட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்காம ஓட்டம் பிடிச்சவரு... லஞ்சம் வாங்கியே, பல கோடிக்கு அதிபதி ஆயிட்டாரு வே...''திருச்சிக்காரரும் மாமூல் பேர்வழி தான்... அதுவும் இல்லாம, தனக்கு நெருக்கமான பெண் போலீசுக்கு, ஸ்டேஷன்ல தனி அறை குடுத்து, உதவியா இளம்பெண் ஒருத்தரை வேலைக்கும் அமர்த்தி, அழகு பார்த்தவராக்கும்...'' என்றார் அண்ணாச்சி.''வாசுதேவன், ஞானசேகரன் ரெண்டு பேரும், பைக்ல எங்க வேகமா போறாங்க பா...'' என, தெருவை பார்த்து கேட்டபடியே, அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    லஞ்சத்துல கொழித்தவருக்கு விருதுகள்.... உருப்பட்டாபோலத் தான்...

Advertisement