Advertisement

போலீசாருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை : மதுரை நகரில் வாகன ஓட்டி போதையில் உள்ளாரா என உறுதி செய்ய 'ஊது...' எனக்கூறி, அதை சுவாசிக்கும்போது போலீசாருக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

நகரில் போலீசார் ஆங்காங்கு வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். வாகன ஓட்டிகள் போதையில் உள்ளாரா என பரிசோதிக்க 'ப்ரீத் அனலைசர்' கருவி வழங்கப்பட்டுள்ளது. இதில் உறுதியானால் மருத்துவ சோதனைக்குட்படுத்தி தற்காலிகமாக ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். இக்கருவி போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.


இதில் சில கருவிகள் பழுதாகியுள்ளன. இதனால் வாகன சோதனையின்போது 'ஊது...' எனக்கூறி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. போதை நபர்கள் 'தம்' பிடித்து 'குப்'பென்று ஊதும் போது அதை சுவாசிக்கும் போலீசாருக்கு தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.போலீசார் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததோருக்கு உடனடியாக தொற்று நோய் பாதிக்கும். சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனால்தான் பாதிப்பு ஏற்பட்டது என அவர்கள் யூகிப்பதில்லை.

போக்குவரத்து பிரிவில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு பயன்படுத்தப்பட்ட 15 'ப்ரீத் அனலைசர்' கருவிகள் வழங்கப்பட்டன. இதில் சில பழுதானதால் பயன்படுத்த முடியவில்லை. போக்குவரத்து பிரிவுக்கு வழங்கப்பட்ட 15 புதிய கருவிகளிலும் சில பழுதாகின. கருவி பற்றாக்குறையால்தான் 'ஊது...' எனக்கூறி சோதனை செய்ய வேண்டியுள்ளது. இதை தவிர்க்க கூடுதல் கருவிகள் வழங்க வேண்டும் என்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கருவிகள் வாங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement