Advertisement

வலியுறுத்தல்! 150 நாட்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ... வைகை அணை இம்மாத இறுதியில் திறப்பு

மதுரை : பாசனத்திற்காக பொதுப்பணித்துறை பரிந்துரையை ஏற்று வைகை அணையை இம்மாத இறுதியில் திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. இரு போக சாகுபடிக்கு பதில் ஒரு முறை சாகுபடி செய்வதற்கு வசதியாக 150 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதால் பெரியாறு, வைகை அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் முதல் போக சாகுபடி செய்ய இயலவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 130.70 (மொத்தம் 152 அடி) அடியாக உள்ளது. நீர் வரத்து 1,150 கன அடியாகவும், வெளியேற்றம் 1,700 கன அடியாகவும் உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 45.96 (மொத்தம் 71 அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 1,592 க.அ., வெளியேற்றம் 60 க.அ.,யாக உள்ளது.

பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இரு போகம் சாகுபடியாகும் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற அணைகளின் தண்ணீர் இருப்பு தேவையான அளவு இருப்பதால் வைகை அணையை திறக்க பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இம்மாத இறுதியில் தண்ணீர் திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. விவசாயிகள் தர்மராஜ், திருப்பதி கூறியதாவது: இந்தாண்டு மழையின்றி முதல் போகம் பொய்த்தது. இரு போக சாகுபடிக்கு பதில் ஒரு முறை சாகுபடி செய்ய வசதியாக 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்தால் தான் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள முடியும்.

குறுகிய கால நெல் ரகங்களை பயிரிட்டால் நெற் கதிர்களில் பால் பிடிக்கும் நேரத்தில் நவம்பரில் துவங்கும் வடகிழக்கு பருவமழையால் பூக்கள் உதிர்ந்து பால் பிடிக்காமல் நஷ்டம் ஏற்படும். நீண்ட கால பயிராக 150 நாள் விளையும் நெல் ரகங்களை பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது. இதை அனுசரித்து முதல் இரண்டு மாதங்கள் தினமும் 900 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement