Advertisement

நிலவில் வசிக்கும் காலம் வரும்

காரமடை:நிலாவும், செவ்வாயும், பூமியின் இன்னொரு தளமாக மாற வாய்ப்பு உள்ளது. அமெரிக்க கண்டத்தில் மக்கள் வசிப்பது போல், நிலவு, மக்கள் வசிக்கும் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அதற்கு இன்னும், 50, 60 ஆண்டுகள் ஆகலாம்,'' என, இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கோவை மாவட்டம், காரமடையை அடுத்த, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவுபரிசு வழங்கும் விழா, நடந்தது. விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி வரவேற்றார்.ஜெ.இ.இ., தேர்வில் வெற்றி பெற்ற சபிதா, ஷாலினி, பிரசாந்த் ஆகிய மூன்று மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கிய, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: பொதுத் தேர்வில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகளவில் உள்ளது. மற்றவர்கள் போன பாதையை தேர்வு செய்வதை விட, நாம் சரியான வழியை தேர்வு செய்ய வேண்டும். நேற்று இருந்ததை விட இன்று தரம் உயர்ந்துள்ளது. அதனால் அதற்கு தகுந்த முறையில் போட்டிக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எந்தத்துறையை எடுத்தாலும், அதன் உச்ச நிலையை அடைய வேண்டும். அரசு பள்ளிகளில் தான் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ., சின்னராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியைகள் நஞ்சப்பன், பழனிசாமி, 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த உதயகுமார் ஆகியோர் பேசினர். விழாவில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை வரலட்சுமி நன்றி கூறினார்.
பின்னர், மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:உலக அளவில், நிலவுக்கு செல்ல வேண்டும் என்ற முயற்சி செய்யும் நாடுகள் அனைத்தும், செப்., 7 ம் தேதி, நமது சந்திரயான் இறங்கும் நிகழ்வுக்காக, காத்திருக்கின்றன. நிலவை நோக்கி செல்லும் சந்திரயான் - 2, இனியும் இரண்டு கட்டங்களைச் தாண்ட வேண்டும். சந்திரயான் அந்த களத்திலிருந்து விலகி, மெதுவாக நிலவில் இறங்கும். எல்லா ஆய்வும் சிறப்பாக நடைபெறுகிறது. இது தொழில் நுட்ப ரீதியான சவாலான காரியமாகும். என்றார். இவ்வாறு, மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அடிச்சு உடுங்க....

Advertisement