Advertisement

லோக்தந்திரிக் ஜனதாதளம் வாகனம் கன்னியாகுமரியில் சிறைபிடிப்பு

நாகர்கோவில்:பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, லோக்தந்திரிக் ஜனதாதளம் சார்பில் நேற்று துவங்கவிருந்த பிரசார பயணத்துக்கான வாகனத்தை போலீசார் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை துார்வார வேண்டும், ஏழை, எளிய இலவச கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லோக்தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபம் முன்பிருந்து நேற்று வாகன பிரசார பயணம் துவங்கப்பட இருந்தது.


இதற்காக, நேற்று காலை வாகன பிரசாரத்தை தொடங்கி வைக்க, அக்கட்சியின் மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார், பிரசார பயணம் மேற்கொள்ளும் வாகனத்துக்கு உரிய அனுமதி வாங்கவில்லை. ஆகையால் வாகன பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது என்றனர். தொடர்ந்து அந்த வாகனத்தை சிறைபிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.


திட்டமிட்டபடி வாகன பிரசார பயணத்தை துவங்க முடியாததால், அக்கட்சியின் மாநில தலைவர் காமராஜர் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர்.



இந்த வாகன பிரசார பயணம் குமரி கொட்டாரம், வழுக்கம்பாறை, நாகர்கோவில், ஒழுகினசேரி, வெள்ளமடம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு சென்று நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக நாளை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிறைவு பெறுவதாக இருந்தது. மாலையில் வாகனத்தை போலீசார் விடுவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement