Advertisement

துரைமுருகனுக்கு சொந்த ஊரிலேயே, 'அடி!'

''தனக்கு, மாவட்ட செயலர் பதவியும்; மகனுக்கு, கவுன்சிலர் சீட்டும் வாங்க, 'நுால்' விடுறா ஓய்...'' என, பெஞ்சில் அமர்ந்தவுடன், முதல் தகவலுக்கு, 'லீட்' கொடுத்தார், குப்பண்ணா.

''யாரு பா... அது,''எனக் கேட்டார், அன்வர்பாய்.

''பால்வள துறை அமைச்சராவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும் இருந்தவர், மாதவரம் மூர்த்தி... ஜெ., முதல்வரா இருந்தப்ப, கலப்பட பால் விவகாரத்துல சிக்கியதால, பதவியெல்லாம் பறிக்கப்பட்டு, 'டம்மி'யாக்கப்பட்டா ஓய்... ''அந்தம்மா மறைவுக்கு பின், தினகரன் கூட கொஞ்ச நாள் சுத்தினா... அப்புறம், அ.தி.மு.க.,வுலயே சேர்ந்தா... சமீபத்துல, திருவள்ளூருல நடந்த நிகழ்ச்சியில கலந்துக்க, முதல்வர் வந்தப்போ, மாதவரத்தில் பிரமாண்ட வரவேற்ப, மூர்த்தி கொடுத்துருக்கா ஓய்...

''அது வழியா, வர்ற உள்ளாட்சி தேர்தலில், தன் மகனுக்கு, சென்னை மாநகராட்சியில, கவுன்சிலர் சீட்டும், தனக்கு மாவட்ட செயலர் பதவியும் வேணுமுன்னு, 'நுால்' விட்டுருக்கா... ஆனா, 'அதுக்கெல்லாம் இப்போ வாய்ப்பில்லை'ன்னு, முதல்வர் தரப்பு கைவிரிச்சுருச்சாம் ஓய்...'' எனக்கூறி முடித்தார் குப்பண்ணா.

''மத்திய அமைச்சரிடம், வாரிய தலைவர் பதவி கேட்டு நச்சரிக்கிறாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''யாருங்க...''எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தே.மு.தி.க., தலைவரு, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ் தான்... எம்.பி., ஆக முடியாத விரக்தியில், கட்சி வேலையில அக்கறை காட்டாம இருக்காரு வே... ''இப்ப, வாரிய தலைவர் பதவி மேல, சுதீஷுக்கு ஆசை வந்திருக்காம்... இதுக்காக அவரு, அடிக்கடி, டில்லிக்கு போயி, மத்திய அமைச்சர், பியூஷ்கோயலை சந்திச்சி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில, தே.மு.தி.க., சேர நான் தான் காரணம்...

''அதுக்கு பதிலா, மத்திய அரசுல, ஏதாவது ஒரு வாரிய தலைவர் பதவியை, எனக்கு கொடுங்கன்னு அடிபோடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''துரைமுருகனுக்கு, சொந்த ஊரிலேயே, 'அடி' விழுந்துருக்காம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்ன ஓய், சொல்லுறீரு,'' என, அதிர்ச்சியடைந்தார் குப்பண்ணா.

''வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகனோட மகன், கதிர் ஆனந்த், 8,141 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாரு பா... ''வேலுார், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதியில இருக்கும், காங்குப்பம் கிராமம் தான், துரைமுருகனின் சொந்த ஊருங்க... கல்யாணத்துக்கு பின், மாமனார் ஊரான, காட்பாடியிலேயே செட்டிலாகிட்டாருங்க. அவரோட சொந்தக்காரங்க எல்லாம், காங்குப்பத்தில் தான் வசிக்கிறாங்க...

''காங்குப்பத்துல இருக்கிற மூணு ஓட்டுசாவடியிலும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், சரிசமமா, 1,162 ஓட்டுகள் வாங்கிருக்கு... 'சொந்த ஊரிலேயே, தி.மு.க.,வுக்கு பலமில்லையா'ன்னு அதிர்ச்சியடைந்த துரைமுருகன், அங்க இருக்குற, நிர்வாகிகளுக்கு போன் பண்ணி, 'கன்னா பின்னான்னு' திட்டிருக்காருங்க... ''அதற்கு அவங்க, 'இவ்வளவு ஓட்டு விழுந்ததே, நமக்கு அதிகம்'ன்னு சொல்லி, போனை, 'கட்' பண்ணிட்டாங்களாம்... இதனால், துரைமுருகன், 'அப்செட்'ல இருக்காருன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அன்வர்பாய்.

நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சொந்த ஊர் என்று ஒன்று இருக்கும் நினைவே தேர்தல் நேரத்தில் தான் வரும் அப்புறம் ஓட்டு ஏன் குறையாது ?

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

    ..............'நுால்' விட்டுருக்கா...மொத்தத்துல இந்த அரசே நீதிபதிகள்,BJP தேர்தல் ஆணையங்கள்.காவல் துறை தயவில் ஓடிக்கொண்டுள்ளது-இத்தனைகாலம்..இதில் இவர் நூல் வேறு அதிசய ஆட்சி.

Advertisement