Advertisement

சவரன் ரூ.2,344 உயர்வு தங்கம் வாங்க ஆர்வம் இல்லை

சென்னை : எப்போதும் இல்லாத வகையில், 12 நாட்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 2,344 ரூபாய் உயர்ந்து உள்ளதால், தங்கம் விற்பனை மந்தமாக உள்ளது.

நாட்டில், தங்கம் விற்பனை மற்றும் பயன்பாட்டில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,500 கிலோவுக்கு மேல், தங்கம் விற்பனையாகிறது. சென்னையில், புகழ்பெற்ற நகை கடைகள் உள்ளன. அவை, குறைந்த செய்கூலி; பழைய தங்கத்தை, புதிதாக மாற்றும் போது, சேதார கட்டணம் தள்ளுபடி என, பல சலுகைகளை வழங்குகின்றன.

இதனால், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பலர், சென்னைக்கு வந்து, தங்க நகைகள் வாங்கி செல்கின்றனர். அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர்; அமெரிக்கா, ஈரான் இடையே நிலவிய போர் பதற்றம்; அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தற்போது, சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவுகிறது. இதனால், சர்வதேச அளவில், உற்பத்தி, வர்த்தக துறைகளின் வளர்ச்சி குறியீடுகள் சரிவடைந்துள்ளன.

இதையடுத்து, அந்த துறைகளில் முதலீடு செய்தவர்கள், தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்று, தங்கம் பக்கம் திருப்பி உள்ளனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், உள்நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, இம்மாதம், 1ம் தேதி, தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,310 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் விலை, நேற்று, 293 ரூபாய் உயர்ந்து, 3,603 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே காலத்தில், சவரனுக்கு, 2,344 ரூபாய் அதிகரித்து, 28 ஆயிரத்து, 824 ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத, கடுமையான விலை உயர்வால், மக்கள், தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், தற்போது, தமிழகத்தில், தங்கம் விற்பனை, 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: ஆடி மாதம் என்பதால், தங்கம் விற்பனை, முந்தைய மாதங்களில் இருப்பது போல இல்லை.


தங்கம் விலை திடீரென தொடர்ந்து, அதிகரிக்கும் சமயங்களில், மக்கள் தங்கம் வாங்குவதில், நிதானத்தை கடைப்பிடிப்பர். அவசர தேவை இருந்தால் மட்டுமே, விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், தங்கம் வாங்குவர். தற்போது, தங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில், பலரும் தங்கம் வாங்க, நிலையான விலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ashanmugam - kuppamma,இந்தியா

    யானையை வாங்கி விடலாம். ஆனால் தங்கத்தின் கிட்டே ஏழை எளிய பாமர மக்கள் ஒருகாலும் நெருங்க முடியாது. அந்த அளவிற்கு ராக்கெட் போல் ஏறிக்கொண்டே போகிறது. இதன் விளைவு ஏழை எளிய பாமர மக்களின் கல்யாண கனவு கானல் நீர் தான். இனி ஏழை எளிய பாமர மக்கள் பெண்பிள்ளைகள் கழுத்தில் தாலி தொங்காது வெறும் "தாலி சரடு"தான் தொங்கும்.

Advertisement