நெல்லிக்குப்பத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில், தினமலர் செய்தி எதிரொலியால், குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஜம்புலிங்கம் பூங்கா அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கிருந்து பெரும்பான்மையான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அந்த மேல்நிலை தொட்டியின் தூண்கள் பல சேதமடைந்துள்ளன. இதனால் தொட்டியின் முழு கொள்ளளவான 10 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.தூண்களை சரி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையில் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர் விடாமலேயே பணியை முடித்திருக்கலாம். ஆனால் டெண்டர் விட்டுள்ளதால் பணி எப்பொழுது துவங்கும் என தெரியவில்லை.இதனால் போதுமான குடிநீர் வழங்க முடியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக பணியை முடிக்க வேண்டும். அதுவரை தொட்டியில் நீர் ஏற்றாவிட்டாலும், நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதை அடுத்து, மோட்டாரில் இருந்து நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்யும் பணியை அதிகாரிகள் துவக்கினர்.இன்று காலை முதல் மக்களுக்கு பழைய அளவில் போதுமான குடிநீர் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!