Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேச்சு: மாணவர்களுக்கு, நற்பண்புகள் மிக மிக முக்கியம். என் ஐந்து வயதில், பள்ளி ஆசிரியர் கற்பித்த போதனைகள், என் வாழ்வில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
அவர், என்னிடம், 'நம்மைவிட்டு பணம் சென்றால், அதனால், பாதிப்பு எதுவும் இருக்காது; உடல்நலம் பாதித்தால், அதை ஓரளவு சரி செய்ய முடியும். நற்பண்புகளை இழந்தால், அனைத்தையும் இழந்தவராகி விடுவோம்' என்றார். அந்த அளவுக்கு நம் வாழ்வில், நற்பண்புகள், மிக முக்கிய பங்காற்றுகின்றன.


த.மா.கா., கட்சி தலைவர், வாசன் அறிக்கை: தமிழக அரசு, தென்காசி மற்றும் செங்கல்பட்டு என, புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது, வரவேற்கத்தக்கது. நிர்வாக வசதிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதாரம் மேம்படவும், இரு பகுதிகளையும் தனி மாவட்டங்களாகப் பிரித்திருப்பது, அப்பகுதி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்திருக்கிறது.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவும், அதிக மக்கள் தொகை கொண்ட, வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிய மாவட்டங்களாக அறிவிக்கவும், தமிழக அரசு முன்வர வேண்டும்.தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி பேட்டி: எதிர்க்கட்சிகளின் ஆட்சி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், கர்நாடகாவில், நிலையான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது. பா.ஜ.,வின் இச்செயல், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி.


அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் பேட்டி: இரு ஆண்டுகளுக்கும் மேலாக, சசிகலா சிறையில் உள்ளார். அவரை வெளியே கொண்டு வருவது தொடர்பான, சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நன்னடத்தை விதிமுறையில், அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர் விரைவில் விடுதலையாவார் என, நம்புகிறோம்.


'ஈக்வேஷன் எங்கியோ உதைக்குதே...' என, எண்ணத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., கட்சியின், கர்நாடக மாநில செயலர், புகழேந்தி பேட்டி: இன்று வரை, ஜெயலலிதாவை மரியாதையாகப் பேசி வருபவர் வைகோ. தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால், தமிழர் நலன் சார்ந்து போராடக் கூடியவர். அவருடைய அரசியல் நிலைப்பாட்டில், எங்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்கள் பிரச்னைக்காக வாதாடக் கூடியவர் வைகோ. அவர், ராஜ்யசபா எம்.பி.,யானது, தமிழகத்திற்கு நல்லது.


'ஒரு கட்சியின் தலைவர், இப்படி விசனப்படலாமா...' என, எண்ணத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, வைகோ பேட்டி:
ராஜ்யசபாவுக்கு நான் போகப் போவதை நினைக்கும்போது, சற்று மலைப்பாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில், பார்லிமென்டில் என் செயல்பாடுகளைக் கண்டு, எல்லா தலைவர்களும் எனக்கு அறிமுகமாகினர். கட்சி எல்லைகளை கடந்து, என்னிடம் அன்பு செலுத்தினர். ஆனால், இப்போதுள்ள, எம்.பி.,க்களில், 95 சதவீதம் பேரை எனக்கு தெரியாது. ஒரு புதிய உறுப்பினர் போல் தான், நான் அங்கு போக வேண்டியுள்ளது. ஆகையால், பெரிய மகிழ்ச்சி என்பதைவிட, இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பெரிய பாரம், என் மனதில் இருக்கிறது.


தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர், நிர்மல்குமார் பேச்சு:
'30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்விக் கொள்கைக்கு, ஏன் அவசரம்?' என, நடிகர் சூர்யா விமர்சித்தது, யாரோ எழுதி கொடுத்ததை, மேடையில் நடித்துவிட்டு சென்றது போல் உள்ளது.
'மூன்று வயது குழந்தையால், மூன்று மொழியை கற்க முடியுமா?' என, சூர்யா கேட்டுள்ளார். தனியார் பள்ளிகளில், சூர்யா போன்ற வசதி படைத்த குழந்தைகள், மூன்று மொழியை கற்கும் போது, கிராமத்து குழந்தைகளாலும், கண்டிப்பாக கற்க முடியும்.


தமிழக, காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன் பேச்சு: தமிழகத்தில், எத்தனை முதல்வர்கள் வந்தாலும், காமராஜரை போல் இருக்க முடியாது. அவர், ஏழைகளுக்கு திட்டங்களை செயல்படுத்துவதில், ஆர்வம் காட்டியவர். ஆனால், இன்று, 15 சதவீத கமிஷனுக்கு, பாலம் கட்டப்படுகிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்கள், பாக்தாத் திருடர்கள். தற்போதைய துணை முதல்வர், பன்னீர்செல்வத்தின் ஊழல்களை, புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துவேன்.வேலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம் பேட்டி: குறை கூறுவதற்கென்றே ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது, தி.மு.க., மட்டும் தான். தி.மு.க., வேட்பாளரின் ஒவ்வொரு அசைவையும், கவனித்து வருகிறோம்.அ.ம.மு.க., கட்சியின் கொள்கை பரப்பு செயலர், சி.ஆர்.சரஸ்வதி பேட்டி: எங்கள் கட்சியை, 'லெட்டர் பேடு' கட்சி என்றவர்கள், பின் எதற்கு, பணம், பதவி என, ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும், எங்கள் ஆட்களை இழுக்கின்றனர்? அ.ம.மு.க.,விலிருந்து வருபவர்களை, தென்காசி வரை சென்று, முதல்வரும், துணை முதல்வரும், கட்சியில் சேர்க்கின்றனர் என்றால், பலமாக இருப்பது, அ.ம.மு.க.,வா, அ.தி.மு.க.,வா? இது, தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம். ஒரு சிலர் வெளியேறுவதால், துவண்டு விடாது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement