Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், திருப்பதி நாராயணன் பேட்டி:'முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு' என்று சொல்வது தவறு. 'பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு' என்பதே, சரியான அர்த்தம். இது தெரியாமல் அல்லது தெரிந்தே மக்களை துாண்டி விடுகின்றன, சில அரசியல் கட்சிகள். பா.ஜ., அரசு சட்டமியற்றியது என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க., இதை எதிர்க்கிறது. நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும், சம வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே, உண்மையான சமூக நீதி.

இந்திய கம்யூ., தமிழக மாநிலச் செயலர், முத்தரசன் அறிக்கை: மத்திய அரசின் நடவடிக்கைகளை, மக்கள் நலன் கருதி, துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு, 'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்ற முறையில், இரட்டை வேடம் போடுகிறது. தமிழக உரிமைகள், நலன்கள் அனைத்தும், மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும், கடும் கண்டனத்திற்குரியது.


'மாவட்டங்களைப் பிரிப்பதில், அரசியல் ஆதாயம் ஏதும் உண்டோ...' என்று எண்ணத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி அறிக்கை: பெரிய மாவட்டங்களைப் பிரித்து, சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில், அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்கள் அனைத்துமே, பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதை விட, இந்த மாவட்டங்களை, ஒரே நேரத்தில் பிரிப்பது தான், சரியாக இருக்கும்.தி.மு.க.,


ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வாகியுள்ள, வழக்கறிஞர் வில்சன் பேட்டி: மேல்சபை உறுப்பினராவேன் என, நான் நினைத்து கூட பார்த்ததில்லை. இது, என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. எனக்கு இது, புது அனுபவம். ராஜ்யசபாவில், நிறைய பிரச்னைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - எம்.பி.,க்கள் எப்படி, தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக குரல் கொடுத்து, பார்லிமென்டை அதிர வைக்கின்றனரோ, அப்படியே என் குரலும் ஒலிக்கும்

தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர், ஏ.ஜோசப் சேவியர் பேட்டி: வளர்ந்த நாடுகளில், அரசு பள்ளிகளில், 10:1 என்ற விகிதாச்சாரப்படி, ஆசிரியர்களை நியமித்துள்ளனர். அங்கு அதிகபட்சம், 200 மாணவர்களுக்கு, 20 ஆசிரியர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில், 200 மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்களை மட்டுமே ஒதுக்கி, அரசு பள்ளிகளுக்கு மூடு விழா காண, அரசே ஏற்பாடு செய்து வருகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    லோக் சபாவில் தயாநிதி மாறன், விரைவில் சென்னை சேலம் பசுமைச்சாலை அமையவேண்டும் என்று பேசினார். இவர் அதையே ராஜ்ய சபா வில் பேசி விரைவில் சாலை அமைய வழிசெய்ய வேண்டும்.

Advertisement