Advertisement

சபாநாயகர் முடிவெடுக்கவில்லை: கர்நாடகாவில் குழப்பம் நீடிக்கிறது

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காங்கிரஸ் -- ம.ஜ.த. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் மீண்டும் ராஜினாமா கடிதங்களை பெற்று சபாநாயகர் ரமேஷ்குமார் விசாரித்தார். அவற்றை உடனடியாக ஏற்காத அவர் 'கடிதம் நேர்மையாக வழங்கப்பட்டுள்ளதா' என யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் தொடர்கிறது.


கர்நாடகாவில் ம.ஜ.த.வின் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகிக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல் மற்றும் ம.ஜ.த. தலைமை மீது எழுந்த அதிருப்தியால் இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்பப் பெற்றனர்.


ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் ரமேஷ்குமார் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் 'எங்களுடைய ராஜினாமாவை ஏற்க வேண்டும்; எங்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாதென சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தனர்.


இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து உத்தரவிட்ட விபரம்:

மாலை 6 மணிக்குள் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். அதன் மீது நள்ளிரவு 12 மணிக்குள் சபாநாயகர் உரிய முடிவை எடுக்க வேண்டும். இரு மாநில டி.ஜி.பி.களும் எம்.எல்.ஏ.க்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


இந்நிலையில்'ராஜினாமா குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டும்; சபாநாயகருக்கு உத்தரவு போட நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை; சில எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனு நிலுவையில் உள்ளதால் அதை தான் விசாரிக்க முடியும்' என ரமேஷ்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக விசாரிக்கும்படியும் கோரப்பட்டது.


அப்போது அமர்வு கூறியதாவது: இந்த விவகாரத்தில் ஏற்கனவே எங்களுடைய உத்தரவை பிறப்பித்துள்ளோம். அதை முதலில் செயல்படுத்துங்கள். உங்கள் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது. நாளை (இன்று) தான் விசாரிக்கப்படும். இவ்வாறு அமர்வு கூறியது.


இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு மற்றும் சபாநாயகர் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மும்பை ஓட்டலில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு தனி விமானங்கள் மூலம் பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். மாலை 6:03 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்தனர். அவர்களை தனித்தனியாக அழைத்து சபாநாயகர் விசாரித்தார்.


பின் ரமேஷ்குமார் அளித்த பேட்டி: என் 40 ஆண்டு கால பொது வாழ்வில் கவுரமிக்கவனாக மரியாதையாக வாழ்ந்து வருகிறேன். சட்டசபை விதிகளின் படி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் நான் உள்ளேன். யாருக்கும் எதற்காகவும் நான் தலை வணங்க மாட்டேன். 1984ல் கட்சி தாவல் தடை சட்டம் அமலுக்கு வந்தது. அப்போது ஒருவர் ராஜினாமா செய்தால் அதன் மீதான பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து விசாரணை நடத்தியுள்ளேன். ராஜினாமா கடிதங்கள் நேர்மையாக கொடுக்கப்பட்டுள்ளதா என முடிவெடுக்க எனக்கு அவகாசம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்பார் என பா.ஜ.வினர் எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது இந்த குழப்பம் தீர இன்னும் சில நாட்கள் ஆகும். இதற்கிடையே மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மும்பைக்கே திரும்பிச் சென்றனர்.

ஏன் ராஜினாமா செய்யணும்; குமாரசாமி எதிர் கேள்வி: கர்நாடகாவில் நிலவும் நெருக்கடி குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நேற்று காலை ஆலோசனை நடந்தது. மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், சித்தராமையா, பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வர் குமாரசாமியும் பங்கேற்றனர். பின் குமாரசாமி அளித்த பேட்டி: நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். எடியூரப்பா முதல்வராக இருந்த போது 17 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போது அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரா, என எதிர்கேள்வி எழுப்பினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மும்பைக்கே திரும்பிச் சென்றனர்// எந்த கட்சி காசிலே தனி விமானம் போய் வருகிறது? கூவத்தூரை விட ஆயிரம் மடங்கு அதிக செலவு செய்ய முடிகிறது. அதை எப்படி வசூல் செய்வான்னு ஏன் எவனுமே கேட்க நாதியில்லாமல் இருக்கானுங்க.. லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த பிரதமர்ன்னு சொல்லிட்டு அலையும் காவிகள் என்ன சொல்லி மழுப்புவீர்கள்.

 • Shroog - Mumbai ,இந்தியா

  MLA க்கள் ராஜினாமா செய்தால், அந்த தொகுதிகளில் மறு தேர்தல் வைக்க வேண்டும். எந்த கட்சிக்கு MLA க்கள் போவது என்பது அவர்களது முடிவு கிடையாது. முந்தய தேர்தலில் நான் காங்கிரஸ் கட்சி சார்பாக நின்றவருக்கு தான் ஒட்டு போட்டேன். அவர் இப்போ பிஜேபி கட்சிக்கு போவதாக இருந்தால், என்னுடைய வாக்கை நான் திருப்ப பெற எனக்கு உரிமை வேண்டும்.

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  எந்த வியாதியும் வரும்போது விரைவாக வந்து விடும் . வியாதி குணமடைய பல நாட்கள் ஆகும் . அது போல் கர்நாடகாவை பிடித்த மத சார்பற்ற ஜனதா தளம் அதை விட்டு செல்ல பல நாட்கள் ஆகும்

 • blocked user - blocked,மயோட்

  ஆட்சியை விட குழப்பம்தான் அதிகம் நடக்கிறது.

Advertisement