Advertisement

டவுட் தனபாலு

பத்திரிகை செய்தி: 'மேகதாது அணை திட்டம் தொடர்பாக, கர்நாடக அரசு அளித்துள்ள கருத்துருவை, நிராகரிக்க வேண்டும்' என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், ஜல்சக்தி துறை அமைச்சர், கஜேந்திரசிங் ஆகியோருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

டவுட் தனபாலு: மேகதாது அணைக்கு, ராகுல் மட்டுமே ஆர்வம் காட்டியது போலவும், அவரின் தேர்தல் பிரசாரம், அதைத் தான் வெளிப்படுத்தியது போலவும் பேசி வந்தாங்களே... இதுக்கு என்ன சொல்லப் போறாங்க... 'தி.மு.க.,வினர், கர்நாடகா அரசிடம் பேசணும்'னு, நொடிக்கு நுாறுமுறை சொன்னவர்கள், இப்போது ஏன், கடிதத்தோடு நிறுத்திட்டாங்க என்ற, 'டவுட்' வருதே...!

***

காந்தி பேரவை தலைவர், குமரி அனந்தன்: ஆட்சியாளர்களை சந்தித்து, மதுவிலக்கை அமல்படுத்தவும், மதுவில்லா தமிழகத்தில், காந்தியின், 150வது பிறந்தநாளை கொண்டாடவும், தமிழக அரசு வழி காண வேண்டும் எனக்கோர உள்ளோம்.

டவுட் தனபாலு: 'மதுவிலக்கு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்; நாங்களே படிப்படியா செய்வோம்; அளவாகக் குடித்தால், ஒரு கெடுதியும் இல்லை... திடீர்னு மதுவிலக்கு கொண்டுவந்தால், கைகால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி வந்திடும்'னு, அமைச்சர்கள் ஆளாளுக்கு, கருத்துத் தெரிவித்துவரும் நிலையில், எந்த நம்பிக்கையில், இந்தக் கோரிக்கையை வைக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது...!

***

ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்: சட்டசபை தேர்தலின் போது, என்னை தவிர வேறு யாரும் முதல்வராக வருவதை, மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மக்களின் விருப்பத்தை ஏற்று, எனக்கு முதல்வர் பதவியை, ராகுல் வழங்கினார்.

டவுட் தனபாலு: 'ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிக்கு, முழுக்க முழுக்க நான் தான் காரணம்; என்னை நம்பும் அளவுக்கு, காங்கிரசில் வேறு யாரையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை' என்பதை எதற்கு, இவ்வளவு சுத்திவளைச்சுச் சொல்றீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாங்க எல்லா பிரச்னைக்கும் கடிதம் தான் எழுதுவோம். எழுதிவிட்டு அப்படியே எங்கள் வீட்டு இரும்புப்பெட்டியில் ‘பத்திரமாக’ வைத்துவிடுவோம். வேலை முடிந்தது

Advertisement