Advertisement

மகிழ்ச்சியே மனஅழுத்தம் தீர்க்கும் மாமருந்து

Share
வாழ்வில் தினமும் எத்தனை மனிதர்களை நாம் சந்திக்கிறோம், சில முகங்களில் எப்போதும் சிரிப்பு தவழ்கிறது, சில முகங்கள் எப்போதும் இறுகிய கான்கிரீட் தளம்போல் இருக்கிறது. காரணம் நம் மனம்தான்!

அளவுக்கதிகமான வேலைப்பளு, இல்லாமை, இயலாமை, தாழ்வுமனப்பான்மை, சந்தேகம், மனதிற்குப் பிடித்தவர்களின் இறப்புதரும் இழப்பு, பொருளாதாரக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், இல்லறத்தில் நாட்டமின்மை, அன்புக்கு ஏங்குதல், நம்பி மோசம் போனது, வாழ்வு குறித்த புரிதலின்மை, உறவினர்களின் தொந்தரவு, மற்றவர்களைப் போல நம்மால் ஆடம்பரமாக வாழமுடியவில்லையே என்கிற ஆதங்கம், தனித்தியங்க முடியாமல் யாரையாவது சார்ந்திருக்க வேண்டியுள்ளதே என்கிற வருத்தம் இவையே மனஅழுத்தத்தின் முக்கியக் காரணங்களாய் அமைகின்றன. மனஅழுத்தம் வரும் போது நம் சொற்கள் தடிக்கின்றன.ரத்தம் ஜிவ்வென்று பாதத்திலிருந்து தலைக்கு ஏறுகிறது, நரம்புகள் புடைத்துத் துடிக்கின்றன. கண்கள் கோவைப் பழம் போல் செக்கச்செவேலென சிவக்கின்றன. மொத்தத்தில் நம் இதயத்துடிப்பே மாறி உடல் நடுங்குகிறது. தாங்கமுடியாத தலைவலி வருகிறது. செய்வதறியாது தடுமாறுகிறோம்.
மகிழ்வான மனநிலை
ஒரு சிக்கல் நம்மை ஆட்டுவிக்கும்போது அதன் ஆதி முடிச்சை எவ்வாறு அவிழ்த்து எப்படி வெளியே வருவது என்பதை நாம் அறிந்திராத போது, தேன்பாட்டிலுக்குள் விழுந்த எறும்பைப்போல் அதற்குள்ளாகவே மூழ்கி அப்பால் காணாமல் போகிறோம். உள்ளே அதிகமான அழுத்தம் வந்தவுடன் நம் வீட்டில் சமையல் செய்யும் குக்கர் அதன் பாதுகாப்பு நாப்பை உடைத்துக்கொண்டு உள்ளிருக்கும் அழுத்த நீராவியை எப்படி வெளியேற்றுமோ, அதைப்போல் எதைக் கண்டும் அசராத மகிழ்வான மனநிலை நம்மை மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது.என்ன நடந்தாலும் சிலர் எல்லாவற்றையும் எப்படிச் சிறுபுன்னகையோடு கடக்கிறார்கள்? எல்லாவற்றையும் எப்படி இயல்பாக எடுத்துக்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார்கள்? என்று கேட்கத் தோன்றுகிறதுதானே! எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்! என்பதுதான் அவர்களின் அமைதியின் சூத்திரம். முன்பு புறப்பட்ட அதே பாதையில்தான் இந்தப் பயணம் கொண்டுசேர்க்கும் என்கிற எண்ணம் அவர்களிடம் இருந்ததில்லை.அவர்கள் இளமையில் இருந்ததைவிட இப்போது அதிக உற்சாகமாகவும் மனஉறுதியோடும் தெளிவாகவும் இருக்கிறார்கள். எண்பத்தைந்து வயதாகும் அந்தப் பெரியவர் தான் இறந்தபின் தன்னைத் தன் மனைவியின் சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும் என்று இடத்தைத் தேர்வுசெய்து, அதற்குப் பணம் கட்டிவிட்டு உற்சாகமாக அதிகாலையில் எழுந்து வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். இன்னொரு பெரியவர் தன் பேரனோடு 'பேட்ட' படத்தின் ரசிகர் ஷோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எண்ணங்களில் கவனம்
இன்னொரு டாக்டர் அதிகாலை எழுந்து தன் காரைத் விட்டுவிட்டு காதில் ஹெட்போனோடு இருபது கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் புல்லாங்குழலில் 'அலைபாயுதே கண்ணா' வாசித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு எழுபது வயதுப் பெரியவர் முனைவர் பட்ட ஆய்வுக்காகக் கிராமம் கிராமமாய் பேருந்தில் பயணித்து களஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.கொட்டும் குளிரில் நீராடி திருப்பாவை பாடி முடித்து கூடாரைவல்லியன்று ஆண்டாள் சந்நிதியில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று எண்பது வயதில் பாசுரம் பாடிவிட்டு முழங்கையில் நெய்வழிய அக்கார அடிசில் எனும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபடிபக்தியால் நனைந்து கொண்டிருக்கிறாள் அந்த அன்பு மூதாட்டி! அவர்களுக்கெல்லாம் மனஅழுத்தம் வருவதேயில்லையா? எதற்கும் பதறாமல் என்ன நடந்தாலும் அவர்கள் எப்போதும் இயல்பாக இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாய் அமைகிறது.மற்றவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம்தான் நம் மனதையும் பாதித்து உடலையும் பாதிக்கிறது. ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நாம் எடுக்கும் தவறான முன் முடிவுகள்தான் நம் வாழ்வில் சிக்கலை உண்டாக்குகின்றன. பயம், பதற்றத்தை உருவாக்குகிறது, பதற்றம் தடுமாற்றத்தைத் தருகிறது, தடுமாற்றம் தவறு செய்யவைக்கிறது. எப்போதும் நிதானமாக இருப்பவர்கள் எந்த வெற்றியைக் கண்டும் துள்ளுவதில்லை, தோல்வி கண்டால் துவளுவதுமில்லை. நம்மால் தாங்கமுடிகிற துன்பத்தையே இறைவன் நமக்கு வழங்குகிறான் என்ற சரியான புரிதலோடு எல்லாவற்றையும் இயல்பாகக் கடந்துபோய்விடுகிறார்கள்.
எப்படித் தவிர்ப்பது?
எல்லோரிடமும் இயல்பாகப் பழகாமல் தனிமையிலே இனிமைகாண நினைப்பவர்கள் அதிகமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தனியே இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று தேவையில்லாத வாட்ஸ்ஆப் கூக்குரல்களுக்குச் செவிகளையும் மனதையும் தந்து நாம் நிம்மதியை இழக்கிறோம்! வாட்ஸ்ஆப்பை உங்கள் அலைபேசியிலிருந்து அகற்றிவிடுங்கள். தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளைப் பார்த்து ரத்தம் கொதிப்பவர்களே தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவாழப் பழகுங்கள், எதிர்மறையான எண்ணங்கள் விலகும், யாரிடமாவது சண்டைக்குப் போகவேண்டும் என்கிற போர்க்குணம் மறையும்.இடைவிடாமல் ஒரே வேலையைச் செய்யும்போது ஏற்படும் மனச்சோர்வைச் சின்ன சின்ன நகைச்சுவைகளால் மாற்றிக்கொள்ளுங்கள், நல்ல சிந்தனையைத் துாண்டும் தன்னம்பிக்கை நுால்களையோ, கட்டுரைகளையோ, வாசகங்களையோ அவ்வப்போது படித்து உங்கள் பணிச்சுமையை மடைமாற்றிக்கொள்ளுங்கள்.எப்போது மனம் சஞ்சலப்பட்டாலும் நதி, கடல், வானம் என்று பாருங்கள், நம் துன்பங்களை நீக்கும் மாவலிமையை இறைவன் இயற்கைக்கு வழங்கியுள்ளான் என்று புரிந்துகொள்ளுங்கள்.
மன நிறைவு
நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பு என உணர்ந்த புறநானுாறு “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று புலப்படுத்தியது. மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து உள்ளே ஊற்றப்படும் மாயதிரவமோ சித்துவேலையோ இல்லை, கிடைத்ததைக் கொண்டு நிறைவாக வாழ்வதும், செய்யும் வேலை எதுவென்றாலும் ரசித்துச் செய்வதுமே ஆகும்.நேற்று என்பது முடிந்த ஒன்று, நாளை என்பது வந்தால் உண்டு, இந்த நிமிடம் மட்டுமே நம் கையில் உள்ளது, எனவே ரசித்து அந்தந்த வினாடியில் வசிப்போருக்கு மனஅழுத்தம் வருவதே இல்லை. மகிழ்ச்சியின் அளவு குறைவதே இல்லை. உலகைப் புரட்ட நினைப்பவனால் வீட்டு உரலைக்கூடப் புரட்டமுடியாது போகிறது என்கிற உண்மையை உணர்வோர் எதற்கும் கலங்குவதில்லை.மலை குலைந்தாலும் நிலை குலையாதே! நிம்மதி நின் மதியில்தான் உள்ளது, இதுவும் கடந்துபோகும் என்று சொல்ல அன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் இல்லாததால் நம் தொழில் தோல்விகளும், நாம் பெரிதும் அன்பு வைத்திருக்கும் அன்புக்குரியவர்களும் நமக்குச் செய்யும் வலிமிகுந்த செயல்களுக்கும் அப்படியே நொறுங்கிப்போகிறோம். மூத்தவர்களின் அறிவுரைகளை மதியுங்கள்.
வாய்விட்டுச் சிரியுங்கள்
சிரிப்பைப்போல் அருமருந்து வேறுஏதுமில்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும், நாம் மனஅழுத்தத்திற்குள்ளாகும்போது இறுகும் நம் 300 தசைகள், சிரிக்கும்போது தளர்ந்து நம்மை இயல்பாக்குகிறது, அதனால்தான் துன்பம் வரும்போது வள்ளுவர் சிரிக்கச்சொன்னார். தினமும் நண்பர்களுடன் அரட்டை அடியுங்கள், பூங்காக்களில் காலாற நடந்தபடி சத்தமாகச் சிரியுங்கள், குழந்தைகளோடு கொஞ்சிப்பேசி மகிழுங்கள், பொக்கை வாய் திறந்து அவை சிரிக்கும் அழகை ரசியுங்கள்.இன்னும் ஒரு நல்ல நாளை நமக்கு அளித்த இறைவனுக்கு மனதார நன்றி செலுத்த காலை எழுந்தவுடன் அமைதியாய் அமர்ந்து தியானம் செய்யுங்கள், இன்று யாராவது ஒருவருக்காவது உதவும் வாய்ப்பைத் தா இறைவா என்று வேண்டுங்கள்.ஒவ்வொரு நாள் விடியலிலும் என்ன நடந்தாலும் இன்று முழுவதும் நான் மகிழ்ச்சியாயிருக்கப்போகிறேன்; எந்தச் சூழலையும் என் வேடிக்கைப்பேச்சால் எனதாக்குவேன் என்று உங்களிடம் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், அப்புறம் மனஅழுத்தம் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்!
--முனைவர் சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறைத்தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி திருநெல்வேலி. 99521 40275
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement