Advertisement

மழை நீர்... இயற்கையின் வரப்பிரசாதம்: மறந்து விட்டார்கள் மகத்தான அதிகாரிகள்

தலைநகர் சென்னை துவங்கி, பல பகுதிகளில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், கிடைக்கும் மழை நீரை வீணடித்து, கோடை காலங்களில் குடிநீருக்கு அலைமோதும் அவலநிலையும் நீடிக்கிறது.முன்னோர்கள், குளம், குட்டை அமைத்து, மழைநீரை சேமித்த நிலையில், அவற்றை ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றியதோடு, திட, திரவ கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றிவிட்டோம்.
இதன் விளைவால், தற்போது குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 2001ல், அரசு அலுவலகங்கள், வீடுகள், வணிக வளாகங்களில், கட்டாயம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.மழை நீரை குழாய்கள் மூலம், நிலத்தில் தொட்டி கட்டி, கல், மணல் ஆகியவற்றை பரப்பி, முழுமையாக நிலத்திற்குள் சேமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இத்திட்டங்களை அமல்படுத்தும் பணியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியும் அரசு துறைகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி, முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அரசு அலுவலகங்களிலேயே, அந்த திட்டம் சிதைந்து சின்னாபின்னமாகி காட்சியளிக்கிறது.நீர் மேலாண்மை மேற்கொள்ளும், உடுமலை பொதுப்பணித்துறை,பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏராளமான கட்டடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது அவை முழுவதும் அழிந்துள்ளது.
வீடுகள், வணிக வளாகங்கள் கட்டும் போது, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதை உறுதிப்படுத்தி, அனுமதியளிக்கும் உடுமலை நகராட்சி அலுவலகத்தில், பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டியில், எழுதப்பட்ட அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது; குழாய், தொட்டிகள் பராமரிப்பின்றி சீர்குலைந்துள்ளது. புதிய அலுவலக கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பே அமைக்கப்படவில்லை.
அதே போல், கிராமங்களை நிர்வகிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மழை நீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீர் சேமிக்கும் கலனாக மாறியுள்ளது. தாலுகா அலுவலகம், பள்ளிகள், வேளாண் துறை, மின் வாரியம் என அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு சிதைந்துள்ளது. அரசு துறை அலுவலகங்களில், முதலில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை புதுப்பித்து, மக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ashanmugam - kuppamma,இந்தியா

    உலகத்தில் காசு பணம் இல்லாமல் இறைவனே வாரி வழங்கும் மழை நீர் மனிதனுக்கு ஒர் வரப்பிரசாதம். அந்த மழையை பேணி காப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை அல்லவா. அந்த மழை நீரை வீணாக்காமல், பணத்தை நாம் எப்படி எதிர்கால வாழ்விற்கு சேமித்து வைக்கிறோமோ அதே போல் மழை நீரையும் நாம் நமக்காகவே எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு தன்னிச்சையாக சேமித்து வைக்க முன் வரவேண்டும். இதற்க்கு அரசாங்க ஆணை மூலம் கட்டாய படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பொது மக்களே தணியாத தாகத்தை தீர்க்கும் தண்ணீரின் கஷ்டத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் செயல்படவேண்டும்.

Advertisement