Advertisement

ரயில்வே நிலம் 2வது நாளாக மீட்பு; ஏமாற்றியவர்களை தேடும் அப்பாவிகள்!

சென்னை : ஆக்கிரமிப்பில் இருந்த, வேளச்சேரி ரயில்வே இடத்தை மீட்கும் பணி, இரண்டாவது நாளாக, நேற்றும் நடந்தது. இந்த இடங்களில், வாடகை, குத்தகைக்கு கொடுத்து, அப்பாவிகளிடம், லட்சக்கணக்கான ரூபாய் ஏமாற்றியவர்கள் மாயமானதால், ஏமாந்தோர் அவர்களை தேடி வருகின்றனர்.

வேளச்சேரி, மேம்பால ரயில் நிலையத்தை ஒட்டி, 333 சர்வே எண்ணில், 4.87 ஏக்கர் பரப்பளவு இடம் உள்ளது.அடுக்குமாடிஇதில், 1.15 ஏக்கர் பரப்பளவு இடத்தை ஆக்கிரமித்து, 1990க்கு முன், 97 பேர் குடிசை போட்டு வசித்தனர். இடம் வளர்ச்சி அடைந்ததையடுத்து, கட்சிக்காரர்கள், பணம் படைத்தவர்கள், குடிசை போட்டு வசித்தவர்களுக்கு, சில ஆயிரம் ரூபாய் கொடுத்து, இடத்தை காலி செய்ய வைத்து, அடுக்குமாடி கட்டடங்கள் கட்டினர்.

அதில், 170 கடைகள், 60 வீடுகள் மற்றும் ஒரு தொழுகை கூடம் கட்டப்பட்டன. இந்த இடத்தை, 2003ல், தமிழக அரசு, ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கியது. 2004ல், கடை, வீடு கட்டியவர்கள், நீதிமன்றத்தை நாடினர்.வழக்கு, உச்சநீதிமன்றம் வரை சென்றது. அங்கு, 2018 டிச., மாதம், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள், இடத்தை காலி செய்ய கேட்ட கால அவகாசமும், மார்ச் மாதத்துடன் முடிந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க துவங்கின.

அன்றைய தினம், முகப்பு பகுதியில் இருந்த கடைகளின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று, வீடுகளை இடிக்க துவங்கினர்.பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு போல் கட்டப்பட்டு உள்ளன. வீட்டின் உள் அலங்காரம், கோடீஸ்வரர்கள் வீடுகளை போல் இருந்தது.இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு, 50 - 60 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் சிலரும், வீடு வாங்கி உள்ளனர். கடந்த வாரம், 67 லட்சம் ரூபாய்க்கு, ஒரு வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்:
இடிக்கப்பட்ட மொத்த கட்டடத்தின் மதிப்பு, 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். வீடு, கடைகளில், குத்தகை மற்றும் வாடகை இருந்தவர்கள் பலருக்கு, கட்டடத்தின் உரிமையாளர் யார் என தெரியவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை, யாரிடம் கேட்பது என தெரியாமல் தவிக்கின்றனர்.வாடகை, குத்தகை இருந்தோர் கூறியதாவது:சொந்த கட்டடம் என பேசி தான், எங்களுக்கு வீடு கொடுத்தனர். அவர்களின் வீடு கூட, எங்களுக்கு தெரியாது. தாம்பரம், அம்பத்துார் முகவரியில், ஒப்பந்தம் போட்டனர்.

சிலரது வீடுகள் தெரியும். அவர்களும், மொபைல் போனை அணைத்து வைத்துள்ளனர். ஒவ்வொரு கடைக்காரர்களும், 2 - 5 லட்சம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்திருக்கிறோம்.க டந்த மாதம் கூட, 10 லட்சம் ரூபாய் பெற்று, ஒரு கடையை குத்தகைக்கு கொடுத்தனர். அரசு இடம், வழக்கு இருப்பது தெரியாமல் ஏமாந்துவிட்டோம். பணம் கிடைக்க, போலீசார் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தாராள கவனிப்பு!
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்றுள்ளனர். மாநகராட்சி அனுமதி வாங்காமல், கட்டடம் கட்டி உள்ளனர். சாதாரண மக்கள், இதுபோன்று வீடு கட்டினால், ஆரம்ப நிலையிலேயே, அதிகாரிகள் தடுத்திருப்பர். இதில், பெரிய அளவு, 'கவனிப்பு' இருந்ததால் தடுக்கவில்லை. அதேபோல், மின்இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகள், தாராளமாக வழங்கப்பட்டு உள்ளது.

மர்மம் நீடிப்பு!
லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து வீடு வாங்குவோர், முறையாக ஆணவங்களை பரிசீலிப்பது வழக்கம். இங்கு, வீடு வாங்கியோர், எந்த ஆவணங்களையும் பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்று, போலி ஆவணங்கள் மூலம் வீட்டை விற்றிருக்க வேண்டும் அல்லது, கறுப்பு பணத்தில், ஆணவங்கள் இல்லாமல் வீடு வாங்கி இருக்க வேண்டும். வீடுகள் கை மாறியதில் உள்ள மர்மம், வீடு வாங்கியோருக்கு தான் தெரியும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  அரசு நிலத்தை போய் ஆக்கிரமிக்க வேண்டியது. அப்புறம், அதை வைத்து சம்பாதிக்க வேண்டியது. பின்பு, காலி செய்ய சொன்னால், வாழ்வாதாரம் போய் விட்டது என்று பொய்யாக புலம்ப வேண்டியது. மாற்று இடம் கேட்க வேண்டியது. அதை விற்றுவிட்டு மற்றொரு இடத்தை போய் ஆக்கிரமிக்க வேண்டியது. இப்படியே சுகபோகமாக வாழ வாருங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு. இங்கே வேடிக்கை என்னவென்றால், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு யார் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் வழங்கியது? அந்த அதிகாரிக்கு என்ன தண்டனை? இது போன்ற விஷயங்கள் கூட தெரியாமல் அரசு எப்படி நடக்கிறது? நீதிமன்றங்கள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன? இங்கே எல்லாமே சும்மாதான். மாட்டிக்கொள்ளாமல் எவ்வளவு குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே. அப்படியே மாட்டினாலும் இருக்கவே இருக்கிறது நீதிமன்றம். தடை வாங்கிவிட வேண்டியதுதான். அப்படியே வாழ்நாளை ஓட்டிவிடலாம். சட்டத்தை கடைப்பிடிக்கிறவனும் நேர்மையாக வாழ நினைக்கிறவனும் கடைசிவரை எதையும் அனுபவிக்காமல் உழைத்து ஓடாய் தேய்ந்து சாக வேண்டியதுதான்.

 • Indhiyan - Chennai,இந்தியா

  பேங்க் லோன் கூட குடுத்து இருப்பாங்க. நம்ம அமைப்பு, காசு என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

 • Sutha - Chennai,இந்தியா

  தெரிந்தே கட்சிக் காரர்களிடம் வாங்கி போட்ட பணத்தை எடுத்திருப்பார்கள்.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  எங்கெல்லாம் லஞ்சம் வாங்க முடியுமோ ஊழல் செய்யமுடியுமோ அங்கெல்லாம் செவ்வனே செய்து வைத்திருக்கின்றனர் அரசு அதிகாரிகள். விளங்கிடும்.

 • karutthu - nainital,இந்தியா

  வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்திருந்தால் தெரிந்திருக்குமே ? இதற்க்கு தான் அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவு அலுவலகமூலம் ஒரு வக்கீலை வைத்து வாங்கவேண்டும் .

Advertisement