Advertisement

அமையுமா மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் ... எதிர்பார்ப்பில் 41 ஆயிரம் ஓய்வூதியர்கள்

மதுரை : மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமைக்கும் திட்டம் நிதி அமைச்சக ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள்ளாவது அமையுமா என ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அவர்கள் சார்ந்த கருவூல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஓய்வூதிய அலுவலகம் தனியாக செயல்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 41 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் மதுரையிலுள்ள நான்கு சார்நிலை கருவூலங்கள், மேலுார், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதிய பலன்களை பெறுகின்றனர். இந்த அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அரசு டெண்டருக்கான பணபரிவர்த்தனை, ஸ்டாம்ப் விற்பனை போன்றவையும் நடக்கின்றன. இதனால் ஓய்வூதியம், மருத்துவகாப்பீடு தொடர்பாக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் திறக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. 2017 கருவூல இணை இயக்குனராக இருந்த முத்துப்பாண்டியன் ஓய்வூதிய அலுவலகம் அமைவதன் சாத்தியக்கூறுகள் குறித்து அரசுக்கு திட்ட அறிக்கை அளித்தார். அரசும் அதை ஏற்று நிதித்துறை அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பியது. அங்கு அத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய அலுவலகம் திறந்தால் ஓய்வூதிய பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவைகளை எளிதில் பெற முடியும். தற்போது வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஓய்வூதிய அலுவலகம் அமைந்தால் காத்திருப்பதை தவிர்க்க முடியும். கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு அரசுக்கு ஒரு கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதால் நிதி அமைச்சகம் அலுவலகம் அமைக்க ஒப்புதலளிக்க தயங்குகிறது, என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மதுரை ,கோவை நெல்லை திருச்சி போன்ற இடங்களில் அமைத்தால் இரண்டுமணி நேர பயணத்தில் அலுவலகத்தை அடைந்து குறைகளை தெரிவிக்கலாம் ஆனால் மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு என்பதை அவர்கள் மறந்து பலகால ஆகினவே

Advertisement