Advertisement

'டவுட்' தனபாலு

காங்., முன்னாள் தலைவர், சோனியா: தேர்தல் நியாயமாக நடந்ததா, இல்லையா என்பதை மக்கள் அறிவர். அதிகாரத்தை கைப்பற்ற, கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும், ஆளும் கட்சியே மீறியது துரதிருஷ்டவசமானது.

டவுட் தனபாலு: நியாயமாக நடக்காத தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, ராகுல் எதற்கு பதவி விலகுறாரு... கட்சி நிர்வாகிகளிடம், பிரியங்கா எதற்கு காட்டமா பேசுறாங்க... வரம்புகளை மீறி பெற்ற வெற்றி என்றால், ஆதாரங்களை காட்டி, வழக்கு போட வேண்டியது தானே... எதற்கு இந்தப் புலம்பல் என்பது தான், என்னோட, 'டவுட்!'

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: பாலாற்றை சுரண்டி மணல் கொள்ளையடிக்கின்றனர். 'மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை' என, கலெக்டர் கூறுகிறார். ஆனால், மறைமுகமாக மணல் அள்ள, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

டவுட் தனபாலு: மணல்கொள்ளை இன்றைக்கு நேற்றா நடக்குது... அது, காலங்காலமாக இருக்கு... இதற்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடிய அளவுக்கு, தி.மு.க., ஏன் போராடலை... இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, உங்களிடம் என்ன திட்டம் இருக்கு... இந்த, 'டவுட்'களுக்கு, என்ன பதில் வைத்திருக்கீங்க...!

வி.சி., கட்சி தலைவர், திருமாவளவன்: தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று, நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும்.

டவுட் தனபாலு: தி.மு.க., வாகப் பார்த்து, எவ்வளவு சதவீதம் கொடுத்தாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கூட்டணிக் கட்சிகள் தயாரா இருக்கா... ஏன் இந்த, 'டவுட்'னா, 'சட்டசபை தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த அளவில் தொகுதிகளை ஒதுக்கி, தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிடணும்'னு, உதயநிதி.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்: பள்ளிகளில், தண்ணீர் பிரச்னை குறித்து, 'டிவி'க்களில் செய்தி வெளியிடுபவர்கள், பள்ளிக்கு உதவி செய்யலாம். குறை சொல்வதற்கு முன், அதை நிவர்த்தி செய்வதற்கு, ஊடகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: என்னங்க, இப்படி திடீர்னு கோபப்பட்டுட்டீங்க... எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது, இந்த அறிவுரையை, என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா... நிலவரத்தை சொல்வது தான், ஊடகத்தின் கடமை... 'அரசின் பணிகளை, ஊடகமே பார்த்துக் கொண்டால், அப்புறம், உங்களுக்கு என்ன வேலை'ன்னு, பொதுமக்கள் யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்: இயற்கை கை கொடுக்காத நிலையில், குடிநீர் தேவையை, 90 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறோம்.

டவுட் தனபாலு: இயற்கை, ஏன் கை கொடுக்காமல் போயிடுச்சு... ஏன் இந்த, 'டவுட்'னா, 'நல்லாட்சி நடப்பதால், மாநிலத்தில் மழை கொட்டித் தீர்க்குது; நீர் நிலைகள் நிரம்பி வழியுது... கண்ணுபடும் அளவுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., ஆட்சி நடத்தி வர்றாரு'ன்னு, புளகாங்கிதமாப் பேசி வந்தீங்களே... அதனால்தான், கேட்டோம்...!

கர்நாடகா முன்னாள் முதல்வர், எடியூரப்பா: மாநிலத்தின் பல பகுதிகளில், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்கு தீர்வு காண, மதச்சார்பற்ற ஜனதாதளம் -- காங்., அரசுக்கு அக்கறையில்லை.

டவுட் தனபாலு: நீங்களே இப்படி வருத்தப்பட்டால், தண்ணீருக்காக, கர்நாடகாவை நம்பி இருக்கும், தமிழக மக்கள் எவ்வளவு வருத்தப்படுவது... ஒருவேளை, உங்க ஆட்சியோ, உங்க கூட்டணிக் கட்சி ஆட்சியோ, கர்நாடகாவில் நடந்தால், இந்தக் குரலை எழுப்பி இருப்பீங்களா... ஏன் இந்த, 'டவுட்'னா, உங்களை விட, அதிகம் பாதிக்கப்பட்ட நிலையிலும், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர்கள், வாயே திறக்கலையே... அதனால் தான் கேட்டோம்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement