Advertisement

வாயை திறந்தால் பாயும் நடவடிக்கை: அதிமுக எச்சரிக்கை

சென்னை: தங்களது கருத்தை கட்சியின் கருத்தாக தெரிவிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டர்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் வழியாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும், கருத்துகளை தெரிவிக்க அதிமுக சார்பில் செய்தி தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், எந்த ஒரு விவகாரத்திலம், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைதெரிந்து கொண்டு நிர்வாகிகளை ஒப்புதலை பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பார்கள்.

லோக்சபா தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் துவங்கியுள்ள நிலையில், செய்தி தொடர்பாளர்கள், அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு மீடியா மற்றும் பத்திரிகைகளில் சமூக வலைதளங்களில் எந்த கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம். மற்றவர்கள் யாரும் , தங்களது கருத்துகளை, கட்சியின் கருத்துகளாக கூறக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

விவாதிக்கப்பட்டது என்ன?அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

காலை 10.30 மணிக்கு துவங்கிய இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் ரத்னசபாபதி உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன், கிணத்துக்கடவு எம்எல்ஏ சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. 113 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதிமுக.,விற்கு ஒற்றை தலைமை தேவை என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி அளித்த அடுத்த நாளே ஆலோசனை கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டதால், இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உள்ளதாக அவருக்கு ஆதரவாக அதிமுக அலுவலகம் முன்பும், அமைச்சர் செங்கோட்டையனை பொதுச் செயலாளராக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட காரைக்குடியிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பேசியது என்ன ?ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்படவில்லை. தற்போதுள்ளபடியே கட்சி நிர்வாகம் தொடர்ந்து நடக்கும் என கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதே சமயம், ஒற்றை தலைமை கருத்து குறித்து கூட்டம் முடிந்து வெளியில் வந்த ராஜன் செல்லப்பா பதிலளிக்க மறுத்து விட்டார்.

கூட்டத்தில் முக்கியமாக எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், கூட்டம் முடிந்த பிறகு கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தீர்மானம்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம் :
1. தேஜ கூட்டணியில் பிரதமரை முன்மொழிய அதிமுக.,விற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி
2. லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக.,விற்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி
3. தேர்தலில் அதிமுக.,வுடன் இணைந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி
4. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற உறுதி ஏற்பது.
5. உள்ளாட்சி தேர்தலில் வெற்று பெறும் வகையில் அதற்கான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆப்பு -

    ஆமாம்...முன்னாடியெல்லாம் யாராவது கட்சிக்கு எதிரா கருத்து சொன்னா அது அவரது சொந்தக் கருத்துன்னு சொல்லி டபாய்ச்சுருவீங்களே....இப்போ என்ன ஆச்சு?

  • Girija - Chennai,இந்தியா

    யாரு வாயை இணை துணை ? ஆமா? நாங்க ரெடி ஜூட் விட்ருவோம் எப்படியும் அடுத்த முறை ஆட்சிக்கு வரப்போறதில்ல இப்போதே வந்தவரைக்கும் லாபம் அப்பா துணையாம் , தம்பி வாரிய தலைவராம் , புள்ளை எம் பி ஆம் , மந்திரியாம்? அதுக்கு நாங்க அன்னை கனிமொழி கட்சிக்கே போய்டறோம்.

Advertisement