Advertisement

பருவ மழையால் அணைகள் நிரம்புது

தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்களில், நான்கு நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரியாறு அணை:தேனி மாவட்ட எல்லையில் உள்ள, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில், மூன்று நாட்களாக, தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. அணைக்கு, 163 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 325 கன அடியாக அதிகரித்தது.மொத்தம், 152 அடி உயரமுள்ள அணையில், 112.15 அடியாக நீர்மட்டம் உள்ளது.

தமிழகப் பகுதிக்கு, குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த, 70 கன அடி, தற்போது, 100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை நீர்மட்டம், மேலும் உயர வாய்ப்புள்ளது.

பந்தலுாரில் கன மழை:நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில், மழையுடன், பலத்த காற்று வீசி வருகிறது. கூடலுார் - தேவர் சோலை - சுல்தான் பத்தேரி சாலையில், முக்கட்டி அருகே, நேற்று அதிகாலை, சாலையின் குறுக்கே, மரம் விழுந்தது; மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பந்தலுார் வழியாக திருப்பி விடப்பட்டன.

காலை, 6:00 மணிக்கு மின் வாரியத்தினர், பொதுமக்கள் உதவியுடன், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.இதேபோல, உப்பட்டி - பெருங்கரை - கொளப்பள்ளி சாலையில், இரண்டு கற்பூர மரங்கள், நேற்று காலை, அடியோடு சாய்ந்து, தங்கம்மாள் என்பவரின், வீட்டு கூரை மீது விழுந்தன. வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தோர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குமரி கடலில் சூறாவளி:குமரி மாவட்டத்தில், அணை பகுதிகளான பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, புத்தன் அணை போன்ற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக, பேச்சிப்பாறை அணை, சுருள்கோடு ஆகிய பகுதிகளில், 10 செ.மீ., அதற்கு அடுத்தபடியாக, பெருஞ்சாணி அணை பகுதிகளில், 9.5 செ.மீ., மழை பதிவானது.மொத்தம், 77 அடி கொள்ளளவு உடைய, பெருஞ்சாணி அணையில், 24 மணி நேரத்தில், 5 அடிக்கு, நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று காலை, நீர்மட்டம், 32.40 அடியாக இருந்தது. மழையால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று காலை, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, விவேகானந்தர் பாறைக்கு, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்த பயணியர், பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். திருவள்ளுவர் சிலைக்கு, காலை முதலே, படகு செல்லவில்லை.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மணிக்கு, 50 - 60 கி.மீ., வேகத்தில், காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல, மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

பாபநாசம் அணை:திருநெல்வேலி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், வறண்டு கிடந்த அணைகள், நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையில், இரண்டு நாட்களில், 19 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. கடந்த, 9ம் தேதி, 12.20 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று முன்தினம், 20.40 அடியாகவும், நேற்று, 31 அடியாகவும் உயர்ந்தது. மொத்தம், 118 அடி கொள்ளவுள்ள, மணிமுத்தாறு அணையில், 52.89 அடிக்கு தண்ணீர் உள்ளது. மாவட்டத்தின் பிற அணைகளிலும், நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம்: கன மழை காரணமாக, 'குமரி குற்றாலம்' என்றழைக்கப்படும், திற்பரப்பு அருவியில், நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, பாதுகாப்பு கருதி, திற்பரப்பு அருவியில், சுற்றுலா பயணியர் குளிக்க, பேரூராட்சி நிர்வாகம், நேற்று தடை விதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில், பேருராட்சி ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • GIRIPRABA - chennai,இந்தியா

  இந்தியாவில் உள்ள நதிநீர்களை இணைக்கவிட்டாலும் பரவாயில்லை நம் தமிழ்நாட்டில் உள்ள நதிநீர்களையாவது இணைத்து தண்ணீர் வீணாவதையாவதை தடுத்து தண்ணீர் இல்லாத இடத்திற்கு திருப்பி விடலாம். இதையாவது இப்போது உள்ள அரசு செய்யலாமே. இதற்கு யாரையும் கெஞ்ச வேண்டாமே.

 • kumaresan k - madurai,இந்தியா

  தமிழ் நாட்டை பொறுத்தவரை எவ்வளவு மழை பெய்தாலும் வேஸ்ட் . மழை நீரை சேமித்து வைக்க வசதி இல்லை. வசதி ஏன் இல்லை என்றால் வசதி செய்து வைக்க இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு மனமில்லை. அதனால் நல்ல மழை பெய்தாலும் சிறிது காலத்தில் மீண்டும் வறட்சி வந்து விடும். நல்ல மழை பெய்யும் போது ஒரு நிவாரணமும் வறட்சியின் போது அடுத்த நிவாரணமும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். வனங்களையும் மரங்களையும் மற்ற இயற்க்கை வளங்களையும் அழித்து ரியல் எஸ்டேட்டில் பணம் பார்க்கும் அரசியல் வாதிகளும் மக்களும் எண்ணிக்கையில் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. மற்ற மாநிலங்களிலும் இது நடக்கிறது, ஆனால் இங்கே மனசாட்சியே இல்லாமல் நடக்கிறது. அதனால் தான் இயற்க்கைஇம் இங்கு நம்மிடம் அன்பை காட்ட மறுக்கிறது.

 • oce - tokyo,ஜப்பான்

  திருவள்ளுவர் கடலிலா பிறந்தார் அல்லது உகடலில் வாழ்ந்தாரா. இவர்களது கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. விட்டால் ஆகாயத்தில் கூட பந்தல் போடுவான்கள். வள்ளுவர் கோட்டத்தை விட்டு திருவள்ளுவர் ஏன் அங்கே போனார்.

 • oce - tokyo,ஜப்பான்

  அங்கே வெள்ளம் இங்கே வெள்ளம் என்று சோல்லி வந்த வெள்ளத்தை தடுக்காமல் விட்டு விடுங்கள்.

Advertisement