Advertisement

மணல் கடத்தல் புள்ளிகளுக்கு விருந்து வைத்த ஏட்டு!

''ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தி.மு.க.,காரங்களை தான்... லோக்சபா தேர்தல்ல, அமோக வெற்றி கிடைச்சதும், பழையபடி அடாவடியை ஆரம்பிச்சுட்டாங்க... பொள்ளாச்சி, தி.மு.க., - எம்.பி.,யான சண்முகசுந்தரத்தின் தாய்மாமன் வீடு, உடுமலை, இளையமுத்துார் பகுதியில இருக்குங்க... ''இந்த வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற நிலத்தை, இவங்க தரப்புல விலை பேசியிருக்காங்க... ஆனா, வேற ஒருத்தர் வாங்கிட்டாருங்க... அதை வாங்குனவங்ககிட்ட, 'எப்படி நீங்க பண்ணையம் பண்ணப் போறீங்கன்னு பார்த்துடுவோம்'னு மிரட்டல் விட்டிருக்காங்க...

''அது மட்டுமில்லாம, 50 வருஷமா அங்கிருந்த வாய்க்கால் வழித்தடத்தை, ஜே.சி.பி., வச்சு அழிச்சுட்டாங்களாம்...'' என்றார் அந்தோணிசாமி.

''குடிநீர் பிரச்னை தீரணும்னு கிடா வெட்டி, விருந்து வச்சிருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார் அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி சார்புல, சமீபத்துல, லோயர்கேம்ப்ல இருக்கிற பகவதி அம்மன் கோவில்ல, கிடா வெட்டு நடத்தியிருக்காவ... அப்புறமா, மட்டன் சுக்கா, கோழி வறுவல், பழங்கள், ஐஸ்க்ரீம்னு தடபுடலா விருந்து நடந்திருக்கு வே... ''இதுல, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கான்ட்ராக்டர்கள், உள்ளூர் முக்கிய புள்ளிகள் பலரும் கலந்துக்கிட்டாவ... நகராட்சி பகுதிகள்ல, 10 நாளைக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை பண்ணுதாவ வே...

''நகராட்சிக்குன்னு தயாரிக்கப்பட்ட, 18 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டம், இன்னும் முடிஞ்சபாடில்லை... எல்லாம் சுமுகமா முடிஞ்சு, நல்லா மழை பெய்ஞ்சு, தண்ணி பஞ்சம் தீரணும்னு, கிடா வெட்டு நடத்தியிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எங்கிட்டயும் ஒரு விருந்து மேட்டர் இருக்கு ஓய்...'' என, களத்தில் குதித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''திருச்சி, ஜெம்புநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல, எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டா இருக்கறவர் மேல ஏகப்பட்ட புகார்கள்... மணல் கடத்தலுக்கு ஒத்தாசையா இருந்ததா, இந்த ஏரியா ஏட்டு, போலீஸ்காரர் ஒருத்தரை, ஆயுதப்படைக்கு மாத்திட்டா ஓய்... ''அவா ரெண்டு பேரும், 'தனிப்பிரிவு ஏட்டுக்கும் இதுல பங்கு உண்டு'ன்னு, மேலதிகாரிகளிடம், 'போட்டு' குடுத்துட்டா... ஆனாலும், ஏட்டு, எஸ்.பி., முன்னாடி ஆஜராகி, தனக்கும், மணல் கடத்தலுக்கும் துளியும் தொடர்பு இல்லைன்னு சொல்லி, தப்பிச்சுட்டார் ஓய்...

''சமீபத்துல, குணசீலம் கோவில்ல, ஏட்டு, காதுகுத்து விழா நடத்தினார்... இதுக்கு, மணல் கடத்தல்ல கொடி கட்டி பறக்குற, உள்ளூர் புள்ளிகள் ரெண்டு பேருக்கு அழைப்பு குடுத்து, ஸ்பெஷல் விருந்து வச்சு அனுப்பியிருக்கார் ஓய்... ''இது பத்தி, எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார் போயிருக்கு... இனியாவது அவர் மேல, எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரான்னு பார்ப்போம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ரவிசங்கர் வர்றாரு... சுக்கு காபி போடும் நாயரே...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    புதிய தலைவர் இவர்களை அடக்க வேண்டும்.

Advertisement