dinamalar telegram
Advertisement

ஆற்றில் குப்பை கொட்டினால் கடைக்கு சீல்: தூய்மை பணி நிகழ்ச்சியில் அதிகாரிகள் எச்சரிக்கை

Share
Tamil News
குன்னுார்:'ஆற்றில் குப்பை; இறைச்சி கழிவுகள் கொட்டினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


நீலகிரியின், சுற்றுப்புற மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் நீர், குன்னுார் பஸ் ஸ்டாண்டில் சங்கமித்து, பவானி ஆற்றில் சென்று கலக்கிறது. இந்த ஆறுகளில், குப்பை, துணிமூட்டை, இறைச்சி கழிவு கொட்டுவது, கழிவுநீரை கலந்துவிடுவது போன்ற காரணங்களால், ஆற்றுநீர் மாசுபடுகிறது.



மேலும், வனவிலங்குகள் இந்த நீரை குடிப்பதால், பல்வேறு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால், 'ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், ஆற்றை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.



நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணியை துவக்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், நகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் முன்னிலை வகித்தனர். முதற்கட்டமாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் பகுதி வரையில், 'பொக்லைன்' மூலம், துார் வாரும் பணி நடந்தது.


அதில் அதிகளவில் துணிமூட்டைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இறைச்சி கழிவுகள் காணப்பட்டது. கழிவுகளை தன்னார்வலர்கள் லாரிகளில் ஏற்றி குப்பை குழியில் கொண்டு சென்று கொட்டினர்.அதிகாரிகள் கூறுகையில்,'ஆற்றில் இறைச்சி கழிவு உட்பட குப்பைகள் கொட்டும் கடைகளுக்கு 'சீல்' வைக்கவும்; அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' எச்சரித்தனர்.



'கிளீன் குன்னுார்' நிர்வாகிகள் கூறுகையில்,'முதற்கட்டமாக ஒரு கி.மீ., துாரத்திற்கு குப்பைகள் அகற்றப்படும். தொடர்ந்து, பொக்லைன் செல்ல முடியாத இடத்தில் தன்னார்வலர்கள் மூலம் குப்பை அகற்றப்படும். பவானிக்கு செல்லும் இந்த தண்ணீரை மாசுபடுத்தாமல் காக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement