ADVERTISEMENT
குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், பயணிகளால் வீசப்பட்ட குப்பைகள், 3 டன் வரை சேகரிக்கப்பட்டுள்ளன.நீலகிரியின் முக்கிய சாலையாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் உணவு தின்பண்டங்களின் பிளாஸ்டிக், பாட்டில்கள் உட்பட பிற உணவு கழிவுகளை ஆங்காங்கே வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இந்நிலையில், 'கிளீன் குன்னுார் அறக்கட்டளை' சார்பில், ஐதராபாத் தன்னார்வலர்கள், தடகள வீரர்கள் உள்ளடக்கிய, 80 பேர் கொண்ட குழுவினர், குப்பைகளை அகற்றி துாய்மை பணியை மேற்கொண்டனர். 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும், 4 கி.மீ., துாரத்திற்கான குப்பைகளை சேகரித்தனர்.இதில், ஒன்றரை லாரி அளவிற்கு, 3 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டன. சில இடங்களில், 'துாய்மை பாரத' திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் போடப்பட்டன. மீதமுள்ளவை ஒரு லாரியில் எடுத்து சென்று குப்பைக்குழியில் தன்னார்வலர்கள் கொட்டினர்.மேலாண்மை அறங்காவலர் சமந்தா, அறங்காவலர் டாக்டர் வசந்தன் ஆகியோர் கூறுகையில், 'வாகனங்களில் வருபவர்கள் வீசி செல்லும் 'சிப்ஸ்' பாக்கெட் பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்டவை அதிகமாக இருந்தது. இதுமட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வனப்பகுதிக்குள்ளும், மழைநீர் கல்வெட்டுக்குள்ளும் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளதால் அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 'வாகனங்களில் வருபவர்கள் சாலையில், பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர். இந்த பணியில், தன்னார்வலர் ராஜ்ஸ்ரீ தலைமையில் ஐதராபாத் குழுவினர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!