Advertisement

எப்படி? குன்றம் சட்டசபை கைநழுவியது ... கோட்டையை திமுக கைப்பற்றியது

மதுரை : அ.தி.மு.க.,வின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியை 23 ஆண்டுகளுக்கு பின் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., கைப்பற்றி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


இத்தொகுதியில் இதுவரை எட்டு முறை அ.தி.மு.க., வென்றுள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அ.தி.மு.க.,விற்கு 'நம்பர் ஒன்' சாதகமான தொகுதியாக சுட்டிக்காட்டப்பட்டதால் எளிதில் வென்று விடலாம் என ஆளும்கட்சியின் கணக்காக இருந்தது. தி.மு.க., சார்பில் ஏற்கனவே தோல்வியுற்ற சரவணன் களம் கண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முனியாண்டியை வேட்பாளராக இறக்கியது அ.தி.மு.க., முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டும் 2,396 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் 'கோட்டை'யை தி.மு.க., விடம் பறிகொடுத்துள்ளது அ.தி.மு.க.,


இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை அ.ம.மு.க., வேட்பாளர் மகேந்திரன் அதிகளவில் பிரித்ததால் தான் என்கின்றனர் அக்கட்சியினர். முனியாண்டி பெற்ற 83,038 ஓட்டுக்களுடன் அ.ம.மு.க., பெற்ற 31,199 ஓட்டுக்களை சேர்த்தால் இங்கு அ.தி.மு.க., எளிதில் வென்றிருக்கும். அ.தி.மு.க.,விற்கு சாதகமான விரகனுார், சிலைமான், புளியங்குளம், சாமநத்தம், விராதனுார் பகுதிகளில் தி.மு.க., 2800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றது. அதுபோல் வளையங்குளம், நல்லுார், சோழங்குருணி பகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க.,வை விட 7600 ஓட்டு பெற்றிருந்த நிலையில் இத்தேர்தலில் 800 ஓட்டுக்களே அதிகம் பெற்றது.


கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தேர்தலில் 4 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்ற அ.தி.மு.க., இத்தேர்தலில் 1400 மட்டுமே பெற்றிருந்தது. இதேநிலை தான் நகர் பகுதிகளிலும் காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அ.தி.மு.க., கோட்டையாக இருந்த இத்தொகுதியை 1996க்கு (செ.ராமசந்திரன் வெற்றி பெற்றார்) பின் மீண்டும் தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement