Advertisement

பயங்கரவாதத்தை ஒழிப்போம்! சுஷ்மா பேச்சு

பிஷ்கெக்:''ஜம்மு - காஷ்மீரிலும், இலங்கையிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், மனதை காயப்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில், இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர்,'' என, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் பேசினார்.

மத்திய ஆசிய நாடான, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மாநாடு நடக்கிறது.இந்த அமைப்பில், ரஷ்யா, சீனா, இந்தியா, பாக்., கிர்கிஸ்தான். தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, நேற்று நடந்தது. இதில், நம் நாட்டின் வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:உலகின் பல்வேறு நாடுகளிலும், பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், எங்கள் நாட்டைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.சமீபத்தில், அண்டை நாடான இலங்கையில், பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த இரண்டு தாக்குதல்களாலும், இந்திய மக்களின் மனது காயப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில், நாட்டு மக்கள் உறுதியாக உள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்க, இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கான திட்டங்கள் குறித்து, அனைத்து நாடுகளுடனும் விவாதிக்க, தயாராக உள்ளோம்.பயங்கரவாத ஒழிப்பு மட்டுமல்லாமல், உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களிலும், தொடர்ந்து ஒத்துழைக்க, இந்தியா, தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.இந்த மாநாட்டில், பாக்., வெளியுறவு அமைச்சர், குரேஷியும் பங்கேற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement