Advertisement

100 சதவீதம்! குடிக்க உகந்தது .... ரெட்டேரி நீர் சுத்திகரிப்பு

சென்னை : 'சென்னை ரெட்டேரி நீர், 100 சதவீதம் குடிக்க உகந்தது தான். இந்த ஏரி நீரை, மூன்று நிலைகளில், உயர் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகிக்க உள்ளோம். குடிநீரின் தரத்தில், வாரியம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது' என, சென்னை குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சென்னையின் குடிநீர் தேவைக்காக, புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து பயன்படுத்த, வருவாய்த்துறை ஆணையரகம், 2017 டிசம்பரில், சென்னை குடிநீர் வாரியத்தை அறிவுறுத்தியது.அப்போதைய அரசு முதன்மை செயலர், சோமநாதன் தலைமையில், 2018 மார்ச்சில், நீர் ஆதாரங்களுக்கான சிறப்பு செயல்குழுவை அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆலோசனைஇந்த குழுவில், பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் இடம் பெற்றனர்.
இந்த குழு, நீர் நிலைகளை, நீர் ஆதாரமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும், முன் வரைவுகளையும் தயாரிக்க, சென்னை குடிநீர் வாரியத்திடம் கோரியது. இதையடுத்து, சென்னையை சுற்றி உள்ள, கல்குவாரிகள், மறு சுழற்சி நீர் மற்றும் நீர் எடுக்க சாத்தியமான, நீர் நிலைகள் குறித்த வரைவுகளை, அந்த குழுவிடம், சென்னை குடிநீர் வாரியம் சமர்ப்பித்தது. அதன்படி, சென்னையை சுற்றி உள்ள, 13 ஏரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் முடிவுகளை சமர்ப்பிக்க, அந்த குழு, வாரியத்திடம் கோரியது.

சென்னை குடிநீர் வாரிய பரிசோதனை நிலையம், 'கிங்' பரிசோதனை நிலையம் ஆகியவற்றால் பரிசோதிக்கப்பட்ட, 13 ஏரிகளையும், மீண்டும் பரிசோதிக்கவும், சாத்தியமுள்ள நீர் நிலைகளில், நீர் எடுப்பதற்கு தேவையான, புதிய தொழில் நுட்பம் குறித்த ஆலோசனைகளை தருமாறும், வாரியம் சார்பில், சென்னை, ஐ.ஐ.டி.,யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வாரியம் பட்டியல் அளித்த ஏரிகளில், ஐ.ஐ.டி,, நிபுணர் குழு, நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டது.இதன் அடிப்படையில், 13 ஏரிகளில், கொரட்டூர், திருநீர்மலை, அம்பத்துார் தவிர்த்து, மீதமுள்ள, 10 ஏரிகளில் உள்ள நீரை, சுத்திகரித்து பயன்படுத்தலாம் என, வாரியத்திடம், ஐ.ஐ.டி., குழு தெரிவித்தது.இந்த பரிசோதனை முடிவுகள், சிறப்புக்குழுவின் ஆய்வுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. விவசாய பயன்பாடுகளை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த தென்னேரி நீர் நிலைகளில் இருந்து, நீர் எடுப்பதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டன.

மீதம் இருந்த, 8 நீர்நிலைகளில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், சுத்திகரிப்பு செய்த நீரை வினியோகிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், சாத்தியமுள்ள, ரெட்டேரி, அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் நீர் நிலைகள், முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. சமரசம்இந்த மூன்று நீர் நிலைகளிலும், நீர் எடுப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான பணிகளை துவக்கிய சென்னை குடிநீர் வாரியம், இந்த நீர் நிலைகளில் இருந்து, நீரை சுத்திகரிப்பதற்காக அமைக்கப்படும் நிலையம் மற்றும் அந்த நிலையத்திற்கான வடிவமைப்பை இறுதி செய்யும் பணியை, சென்னை, ஐ.ஐ.டி., வசமே ஒப்படைத்தது.

இந்த மூன்று ஏரிகளில் இருந்தும், நீரை எடுத்து சுத்திகரித்து, பொதுமக்களுக்கு தரமானதாக வழங்க தேவையான, தொழில் நுட்பம், தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள், ஐ.ஐ.டி.,யின் ஆலோசனை அடிப்படையில் அமைய உள்ளது.இந்த ஏரிகளில், கழிவுநீர் உட்புக சாத்தியமுள்ள இடங்கள், ஆய்வின் போது கண்டறியப்பட்டது.குறிப்பாக, ரெட்டேரி பகுதியில், புத்தகரம் - கதிர்வேடு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், கழிவு நீர் குழாய்கள் அமைப்பதற்கான, பணி நிறைவு பெற்று, குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதனால், இவற்றில் இருந்து வரக்கூடிய, கழிவுநீர் அளவு பெருக்கத்திற்கான சாத்தியங்கள், பெருமளவு குறைவு. மேலும், கழிவுநீரானது, நீர் நிலைகளில் உட் செல்வதற்கு முன், அதை வடிகட்டும் திறன் உடைய, 'கன்ஸ்ட்ரக்டட் வெட்லேண்ட்ஸ்' என்ற தாவரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தாவரங்கள், உட்புகும் கழிவு நீரை, சுத்திகரிப்பது மட்டு மின்றி, ஏரிகளில் உள்ள, நீரின் தரத்தை உயர்த்தவும் பயன்படும். இந்த ஏரிகளில், ரசாயன கழிவுகள் இருப்பது, தரப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.அதனால், ஐ.ஐ.டி., ரசாயனம் உள்ளிட்ட, அனைத்து விதமான கழிவுகளையும் சுத்திகரிக்கும், உரிய தொழில் நுட்பத்தில், சுத்திகரிப்பு நிலையங்களை வடிவமைத்துள்ளது.இதனால், ரெட்டேரி நீர், 100 சதவீதம் குடிக்க ஏற்ற தரத்தில் இருக்கும். குடிநீர் தரத்தில், சென்னை குடிநீர் வாரியம், எந்த சமரசமும் செய்து கொள்ளாது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.சுத்திகரிப்பு தொழில்நுட்பம் எப்படி?ரெட்டேரி உட்பட, பல்வேறு ஏரிகளில் இருந்து, சென்னைக்கு குடிநீருக்காக, எடுக்கப்படும் நீரை, எந்தெந்த நிலைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளன என்பதை, ஐ.ஐ.டி., நிபுணர் விளக்கியதாவது:எந்த ஒரு நீர்நிலையிலும், பிளாஸ்டிக், மனித, மிருக கழிவுகள் என, மிதக்கும் கழிவுகளும், குடியிருப்பு கழிவுநீர், ரசாயனம், எண்ெணய் உள்ளிட்ட நீரில் கலந்துள்ள கழிவுகளும் இருக்கும். இதில், மிதக்கும் கழிவுகள், நுண்ணிய முறை, மிக நுண்ணிய முறை ஆகிய, இரு முறைகளில், நீரை வடிகட்டி சுத்திகரிப்பு செய்யப்படும்; இது எளிது. அடுத்ததாக, நீரில் கலந்துள்ள கழிவுகள், மூன்று நிலைகளில் சுத்திகரிப்பு செய்யப்படும். முதலில், 'டிசால்வ்டு ஏர் புளோடேஷன்' என்ற, காற்று மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படும்.

இதில், 90 சதவீதம், நீரின் தன்மை மாறும்.அடுத்ததாக, 'மல்டி கிரேடு பில்ட்ரேஷன்' எனப்படும், பல படிநிலைகளில் வடிகட்டும் தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பு செய்யப்படும். மூன்றாவதாக, 'கார்பன் அப்ட்ராக் ஷன்' எனப்படும், கார்பன் உள்ளிழுக்கும் திறன் மூலம், நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இந்த மூன்று நிலைகளில், 100 சதவீதம், நீர் பருக ஏற்ற தன்மைக்கு மாறும். மேலும், சுத்திகரிப்புக்கு முன்பாகவும், முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னும், நீரில் குளோரின் கலக்கப்படுகிறது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    Too Late. இதை முன்பே செய்திருக்கலாம். பல ஏரிகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

  • test -

    test

Advertisement