Advertisement

போதும்! திட்டச்சாலை உருவாக்கினால் ....7 கி.மீ சுற்றுவதை தவிர்க்கலாம்

கோவை : திட்டச்சாலை உருவாக்கினால்...7 கி.மீ., சுற்றுவதை தவிர்க்கலாம் கோவை, மே 19-கோவை அவிநாசி ரோட்டுக்கும், திருச்சி ரோட்டுக்கும் இணைப்பு ஏற்படுத்தும் வகையில், டாக்டர் ஜெகநாதன் நகரில், 60 அடி திட்டச்சாலை உருவாக்கினால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்; வாகன ஓட்டிகள், 7 கி.மீ., தேவையின்றி அலைவதை தவிர்க்கலாம்.கோவை, அவிநாசி ரோட்டில், ேஹாப் காலேஜ் சந்திப்புக்கு அடுத்து, அரசு மருத்துவ கல்லுாரி எதிரே டாக்டர் ஜெகநாதன் நகர் உள்ளது.

இப்பகுதியில் வசிப்பவர்கள், திருச்சி ரோடு, எச்.ஐ.எச்.எஸ்., காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிக்குச் செல்ல வேண்டுமெனில், அவிநாசி சாலைக்கு வந்து, வரதராஜபுரம் வழியாக சிங்காநல்லுார் சென்று, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அடைய வேண்டும்; 7 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டியிருக்கிறது.இதேபோல், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர்., நகர், கங்கா நகர், திரு.வி.க., நகர், பெத்தேல் நகர், அருள் முருகன் நகர், இந்திரா நகர், கண்ணபிரான் நகர், சூர்யா நகர், காவேரி நகர், நேதாஜிபுரம், மகாலட்சுமி நகர், பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள், பணி நிமித்தமாக நகருக்குள் வந்து செல்கின்றனர். இவர்கள், அவிநாசி ரோட்டுக்கு வர வேண்டுமெனில், திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் வந்து, வரதராஜபுரம் வழியாக, 7 கி.மீ., சுற்றி வர வேண்டியுள்ளது.

ஆனால், 1964ல், டாக்டர் ஜெகநாதன் நகரில், 570 மீட்டர் துாரத்துக்கு, 60 அடி திட்டச்சாலை அமைக்க, நகர ஊரமைப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இச்சாலை, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, 60 அடி அகலத்துக்கு அமையும். நீலிக்கோணாம்பாளையத்தில் கட்டப்படும் மேம்பாலத்தோடு இணையும். இவ்வழியாக வாகன போக்குவரத்து அமைந்தால், தேவையற்ற அலைச்சல் தவிர்க்கலாம்.அவிநாசி ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டுக்கு எளிதாக செல்லலாம். டாக்டர் ஜெகநாதன் நகரை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட, 55 ஆண்டுகளாகி விட்டன.

இன்னும் திட்டச்சாலை உருவாக்கப்படவில்லை.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து விட்டது. வாகன பயன்பாடும் பெருகி விட்டது. போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. பிரதான ரோடுகளுடன் இணைப்பு சாலைகள், திட்டச்சாலைகள் உருவாக்கினால் மட்டுமே, போக்குவரத்து நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். டாக்டர் ஜெகநாதன் நகரில் தற்போது, 30 அடி ரோடே காணப்படுகிறது. இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றி, திட்டச்சாலை உருவாக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு முயற்சிக்க வேண்டும்.

ஒன்று கூட...கடந்த எட்டு ஆண்டுகளில், நகர்ப்பகுதியில் ஒரு திட்டச்சாலை கூட உருவாக்கப்படவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம் ஒதுக்கிய நிதி, வீணாக முடங்கியிருக்கிறது. அத்தொகையை பெற்று, தேவையான இடங்களில் திட்டச்சாலை ஏற்படுத்தினால், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement