Advertisement

ஜெயிக்கிற 'குதிரை!' வெற்றி ரகசியம் அறிய இன்னும் மூணே நாள் .. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடு தயார்

திருப்பூர் : ஓட்டு எண்ணிக்கை நெருங்குவதால், 'கவுன்டிங் ஹால்' தயார்படுத்தும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், 23ம் தேதி நடக்கிறது. மூன்று நாட்களே இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. ஆறு தொகுதிகளுக்கும், 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம், தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை பணிகளும், வீடியோ பதிவு செய்யப்பட உள்ளன.

அதற்காக, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள, ஒவ்வொரு டேபிளுக்கும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள், 14 டேபிள்களுக்கு தனித்தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வெள்ளை தகவல் பலகை தெரியும் வகையில் ஒரு கேமரா பொருத்தப்படுகிறது.அத்துடன், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், அதிகாரிகள், வேட்பாளர் பிரதிநிதிகள், ஓட்டு எண்ணிக்கை அலுவலர், வேட்பாளர் ஏஜன்டுகள் என, தனித்தனி இருக்கை வசதி செய்யப்படுகிறது.

எண்ணிக்கை மையத்திலேயே, இணையதள இணைப்புடன் கூடிய, கம்ப்யூட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான, தளவாடங்கள், நோட்டு புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் நேற்று, கல்லுாரி வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு அலுவலர், ஒவ்வொரு வாகனங்களையும், 'மெட்டல் டிடெக்டர்' கொண்டு, முழுமையாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிசாமி, எண்ணிக்கை மைய பணிகளை பார்வையிட்டார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.வெற்றி பெறுபவர் யார் என்ற 'சஸ்பென்ஸ்' 23ம் தேதி தெரிந்துவிடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement