Advertisement

டவுட் தனபாலு

காங்., பொதுச் செயலர், பிரியங்கா: பா.ஜ., அரசு, எத்தனையோ நலத் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகிறது; அத்தனையும் அரைவேக்காட்டு திட்டங்கள். ஒரு திட்டம் கூட, மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டவில்லை.

டவுட் தனபாலு: கடந்த ஐந்து வருஷமா, பா.ஜ., எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு, காங்., சொந்தம் கொண்டாடி வருது... அப்படீன்னா, அரைவேக்காட்டுக்கு அடித்தளமே, காங்., தானே... புதுசா கட்சி பொறுப்புக்கு வந்த உங்களுக்கு, இது தெரியலையோ என்ற, 'டவுட்' வருதே...!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல்: சூலுாரில், நான் கடைசி நாள் பிரசாரம் செய்வதை, சட்டம் -- ஒழுங்கை காரணம் காட்டி தடை செய்துள்ளனர். பதற்றம் நிலவினால், தேர்தலை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்பது தான், எங்கள் கேள்வி.

டவுட் தனபாலு: உங்களின் பேச்சுகளால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும்னா, அதைத் தடுப்பது தானே முறை... ஒட்டுமொத்த தேர்தலை எதற்கு ஒத்தி வைக்கணும்... மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் கதை மாதிரி, உங்க கருத்து இருப்பதை உணரலையா நீங்க... பக்குவமில்லாத அரசியல்வாதின்னு மக்கள் சொல்லிடப் போறாங்கங்கிறதுல, 'டவுட்'டே இல்லே!


அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன்: மே, 23ல், தமிழக அரசியல், ஒரு புதிய துவக்கத்தை காணப்போகிறது; துரோக கும்பலை அப்புறப்படுத்தப் போகிறது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது.


டவுட் தனபாலு: ரொம்ப காலமா இதையே தான் சொல்லி வர்றீங்க... இந்த முறையாவது, உங்க ஆசை பலிக்குமா... உங்க கணிப்புக்கு மாறாக, பழைய அரசுகளே நீடித்தால், அரசியலில் உங்க பயணத்தை முடித்து, அ.தி.மு.க.,வை ஆதரிக்க ஆரம்பிச்சிடுவீங்களா... ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம்னு நீங்க சொல்வதில், எவ்வளவு துாரம் நிஜம் இருக்கு என்பது, 23ம் தேதி ஊர்ஜிதமாகிடுமே... அதனால் தான், இந்த, 'டவுட்!'


இ.பி.எஸ்., முதல்வர்: அண்ணா பல்கலையில், அரசியல் தலையீடு உள்ளது என்ற, துணைவேந்தர் சுரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது.

டவுட் தனபாலு: 'துணைவேந்தர் நியமனத்தில், ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கு'ன்னு கொளுத்திப்போட்ட கவர்னர், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், சுரப்பாவை துணைவேந்தராக அறிவித்தாரு... இப்போ, சுரப்பாவே குற்றஞ்சாட்டினாலும், பட்டும்படாமலும் மறுப்புத் தெரிவித்து நழுவுறீங்களே... இதுதான், பல, 'டவுட்'களை கிளப்புது...!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்: எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஒழுங்காக செயல்படவில்லை என, புகார் வந்தால், அவர்களை ராஜினாமா செய்ய வைப்போம்.


டவுட் தனபாலு: அரைகுறை நம்பிக்கையோடு தான், வேட்பாளர்களை நிறுத்தி இருக்கீங்களா... எதற்கு விஷப்பரீட்சை... இன்னொரு இடைத்தேர்தல் நமக்கு எதுக்கு என்ற மனநிலைக்கு, மக்களைத் தள்ளாமல் விட மாட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


காங்., தலைவர், ராகுல்: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள், கண்டிப்பாக, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்காது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆட்சி அமைப்போம்.


டவுட் தனபாலு: உங்களை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கும் இந்த மூன்று கட்சிகளும், உங்களோடு கைகோர்க்கும் நிலை வரும்னா, உங்களோடு நிற்கும் கட்சிகள், தேர்தல் முடிவுக்குப் பின், பா.ஜ.,வோடு இணக்கமாகவும் வாய்ப்பு இருக்கு தானே... இந்த, 'டவுட்' ஏன், உங்களுக்குவரமாட்டேங்குது...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement