Advertisement

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை

பெரம்பலுார்: அரியலுார் அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, வறட்சி நிலவும் இந்த நேரத்திலும், பஞ்சமில்லாமல் குடிநீர் பருகுவதுடன், விவசாயமும் செய்து வருகின்றனர்.


அரியலுார், ஜெயங்கொண்டத்தில் இருந்து, 2 கி.மீ.,யில், தெற்குகரைமேடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, கிணற்று நீரையே, குடிநீராக பயன்படுத்துகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்தியது போக, விவசாயத்திற்கும், பம்ப் செட் மூலம் நீரைப் பாய்ச்சி, விவசாயம் செய்கின்றனர்.'மினரல் வாட்டரையோ, லாரி மற்றும் டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரையோ, ஒருநாளும் காசு கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு வந்தது கிடையாது' என்கின்றனர், இக்கிராம மக்கள்.


புதுக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யும் நீரை கூட, இவர்கள் குடிநீருக்கு பயன்படுத்துவது கிடையாது. மற்ற தேவைகளுக்கே பயன்படுத்துகின்றனர். இக்கிராமத்தில், 30 குடும்பங்கள் வசிக்கின்றன.இதில், 25 வீடுகளில் கிணறுகள் உள்ளன. எஞ்சியுள்ள, ஐந்து வீடுகளிலும் விரைவில் கிணறு அமைக்க உள்ளனர். வானம் பார்த்த பூமியான இக்கிராமத்தில், வானம் பொய்த்து, கடும் வறட்சி நிலவும் இப்போதும், ஊர் முழுக்க வாழை, எலுமிச்சை, கொய்யா, கேந்திப்பூக்கள், சம்பங்கி, பலா, மா, முந்திரி என, விவசாயம் நிறைந்து, பசுமையாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம், வீடுதோறும் கிணறு அமைத்துள்ளது தான்.இதேபோல், இக்கிராமத்துக்கு அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தில், 500 குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த ஊரில் உள்ள வீடுகளில், 350க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. மீதியுள்ள வீடுகளிலும், கிணறுகள் அமைத்து வருகின்றனர்.


தெற்குகரைமேடு கிராம மக்கள் கூறியதாவது:எங்கள் ஊரில், தலைமுறை, தலைமுறையாக கிணறுகள் அமைத்து, பராமரித்து வருகிறோம். எங்கள் ஊரில் கிணறுகள் அதிகமாக இருப்பதால் தான், நிலத்தடி நீர் நன்றாக உள்ளது. அந்த காலத்தில் இருந்து, இன்று வரை கிணற்று நீரைத் தான் பருகுகிறோம். குடிநீரை காசு கொடுத்து வாங்கியது இல்லை.தண்ணீருக்காக போராட்டம் நடத்தியது இல்லை. எங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வந்ததில்லை.விவசாயத்திற்கும், கிணற்று நீரையே பயன்படுத்துகிறோம். தற்போது, கோடை காலம் என்பதால், சற்று குறைவாக பயன்படுத்துகிறோம்.தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கிணறுகளை, நாம் பாதுகாக்க வேண்டும். எங்கள் கிராமத்தைப் போன்று, மற்ற கிராமங்களிலும் கிணறு அமைக்க, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

15 மாவட்டங்களில் நீர் பற்றாக்குறைவேளாண் பொறியியல் துறையின், திண்டுக்கல் மாவட்ட பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியதாவது:டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் மேட்டுப்பகுதி மாவட்டங்களான திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி, சேலம், வேலுார், அரியலுார், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி ஆகிய, 15 மாவட்டங்களில், நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் சராசரியாக, 365 மி.மீ., தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். இதில் இதுவரை, 50 முதல், 70 சதவீதம் வரையே பெய்துள்ளது. பருவ மழை பற்றாக்குறையால் நெல், கரும்பு, வாழை போன்ற நீண்ட கால பயிர்கள், காய்கறி, பூக்கள், பழங்கள் மற்றும் மலைப் பயிர்களுக்கு உரிய நீர் கொடுக்க முடிவதில்லை.உபரி நீரின்றி கிணறு, ஆழ்துளை கிணறுகளிலும் நீர் வற்ற துவங்கியுள்ளன. விவசாயம் மற்றும் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.மழைநீரை சேமிக்க தேவையான நடவடிக்கைகளில், விவசாயிகள் இறங்க வேண்டும். மழை நீரை கிணற்றுக்கு அருகில் வடிகால் அமைத்து சேகரிக்க வேண்டும்.விளை நிலங்களுக்கு அருகில் பண்ணைக் குட்டையை அமல்படுத்தினாலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ருத்ரா -

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. குளர் பான நிறவனங்களுக்கு நீர் தராதீர்ககள். கழிவு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு கிரமும் இப்படி இருக்க எடுத்துக் காட்டாக திகழ்கிறீர்கள். GREAT.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத இதமான சீதோஷ்ண நிலை உள்ள ஒரே ஒரு ஊரையாவது வாசகர்கள் யாராவது சொல்லமுடியுமா?அப்படி ஊரே இல்லையா

Advertisement