Advertisement

மத்தியில் அமையவுள்ள புதிய அரசுக்கு நெருக்கடி: பணப் புழக்கம் இல்லாததால் வங்கிகள் திணறல்

புதுடில்லி: சமீப காலமாக, அரசு திட்டங் களுக்கான செலவுகள் குறைந்தது மற்றும் தேர்தல் செலவுகள் அதிகரித்து உள்ளதால், பணப் புழக்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வங்கி துறை திணறி வருகிறது. அதை மீட்டெடுக்க, இந்தத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை, மத்தியில் அமைய உள்ள புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. வரும், 23ல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. லோக்சபா வுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.ஏற்கனவே அறிவிக்கப் பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அதிக அளவு, அதற்கு செலவிடப்படவில்லை.அதே நேரத்தில், தேர்தல் செலவு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள, பா.ஜ., அரசு தொடருமா அல்லது புதிய அரசு அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற காரணங்களால், கடந்த சில மாதங்களாகவே, பெரிய அளவில் கடன் அளிப்பதை, வங்கிகளும் நிறுத்தியுள்ளன.


இது போன்ற நேரங்களில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தான், தொழில் துறைக்கு கை கொடுக்கும். ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பல,ஏற்கனவே சிக்கலில் உள்ளன. கடந்தாண்டு, செப்., கணக்கின்படி, நாடு முழுவதும் உள்ள,10 ஆயிரத்து, 190 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வசூலிக்க வேண்டிய கடன் மட்டும், 20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனத்தின் வீழ்ச்சியால், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதில் சுணக்கம் காட்டத் துவங்கியுள்ளன. இதனால், தொழில் துறையிலும், வங்கி துறையிலும், பணப் புழக்கத்துக்கு தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: வழக்கமாக, தேர்தல் நடக்கும் நேரத்தில், வங்கிகளிலும், தொழில் துறையிலும் பணப் புழக்கம் சற்று குறைவாகவே இருக்கும். அரசியல் கட்சிகளுக்கு பயந்து, பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் செலவை குறைத்துக் கொள்ளும். அதே நேரத்தில், அரசியல் கட்சிகளிடம் பணப் புழக்கம் இருக்கும்.


ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த உதவியும் கிடைக்காது.மேலும், தற்போதுள்ள அரசு தொடருமா; புதிய அரசு வந்தால், அதன் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதால், தொழில் துறைகளுக்கு கடன் அளிப்பதிலும், வங்கிகள் சற்றுபின்வாங்கும்.

தொழில் துறையினருக்கு, வங்கிகள் கடன் அளிக்காத நிலையில், அதற்கு உதவும், வாடகைத் தாயாக விளங்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது சிக்கலில் உள்ளன. அதனால், அவையும், கடனுதவி அளிக்க முடியாத நிலையில், தொழில் துறையினர் தத்தளிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த நிலை மாறும்.
இருப்பினும், கடந்த சிலமாதங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளதால், புதியஅரசுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. வங்கி துறையில் அதிக அளவு முதலீடுகள் செய்ய வேண்டிய கட்டாயம், அரசுக்கு உள்ளது. புதிய அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளே, வங்கிதுறையையும்,
தொழில் துறையையும் காப்பாற்றும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பங்குச் சந்தை எதிர்பார்ப்பு
'தேர்தல் முடிவுகள், பங்குச் சந்தையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்' என, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக வைத்து செயல்படும், நிதி ஆலோசனை வழங்கும், யு.பி.எஸ்., நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கணித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு சர்வதேச காரணங்களாலும், இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதாலும், கடந்த சில நாட்களாகவே, பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்காவிட்டால், 'நிப்டி' எனப்படும், தேசிய பங்குச் சந்தையில், 10 - 15 சதவீதம் வரை சரிவு ஏற்படும். கடந்த, 2004 மற்றும் 2009 தேர்தல்களின் அடிப்படையில், இது கணிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், பங்குச் சந்தையில், 5 - 10 சதவீதம் உயர்வு ஏற்படும். ஒருவேளை இந்தக் கூட்டணி, 250க்கும் குறைந்த இடங்களில் வென்றால், தற்காலிகமாக பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டு,புதிய அரசு அமை வதை பொறுத்து, அதுமாறுபடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ப.சி. செய்த ஊழல்களால் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

 • Viswanathan Subramanian - coimbatore ,இந்தியா

  தினமலர் வாசகர்களின் கருத்துக்களை அப்படியே பிரசுரம் செய்கிறது.

 • Viswanathan Subramanian - coimbatore ,இந்தியா

  இங்கே பதிவான கருத்துக்கள் முற்றிலும் முரணானவை. இந்தியா வின் நிலையை அறியாமல் எழுதுகிறார்கள். மக்கள் அவை தேர்தல் முடிவுகள் மோடி அரசு அமைவதை நோக்கி செல்கிறது.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  மோடியின் சாதனைகளில் இதுவும் ஒன்று

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இன்னும் விளக்கம் எழுத ஆசை. பதிவாகுமா என்ற சந்தேகம் எனவே நிறுத்தி விட்டேன்

Advertisement