Advertisement

எஸ்.ஐ., வசூல் வேட்டையை கண்டுகொள்ள ஆளில்லை!

'போட்டா போட்டி போடுறாங்களாமா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், கோவை, கோவாலு.


''யாரு, எதுக்குவே போட்டி போடுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.


''மின் வாரியத்துல, மின் இயக்கப் பிரிவின் இயக்குனர் பதவி, உபகரணம் கொள்முதல், மின் திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம், சென்னை வடக்கு, கோவை, ஈரோடு மண்டலங்கள், வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம்னு, பல இடங்கள்ல, தலைமைப் பொறியாளர் பதவி, காலியா கிடக்குங்ணா...


''இதுல, மின் திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம் தவிர, மத்த பிரிவுகள்ல, கோடிக்கணக்கான ரூபாய் புழங்குதுங்களாமா... இதனால, காலியிடங்களைப் பிடிக்க, வேற பிரிவு பொறியாளர்கள் மத்தியில, கடும் போட்டி நிலவுதுங்ணா...


''பலரும், பல, 'ரூட்'கள்ல காய் நகர்த்தி, 'கவனிப்பு' பண்ணிட்டு இருக்காங்களாமா... ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சு, தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் ஆனதும், காலியிடங்களை நிரப்ப போறாங்ணா...'' என, முடித்தார் கோவாலு.


''விருதெல்லாம் வாங்குனவருக்கு நேரம் சரியில்லாம போயிடுத்து ஓய்...'' என, அடுத்த தகவலை கையில் எடுத்தார், குப்பண்ணா.


''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''சமீபத்துல, மதுரை, திருமங்கலம்- பக்கம், ரெண்டு ரயில்களை, ஒரே தண்டவாளத்துல அனுப்பிச்சுட்டாளோல்லியோ... ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு இடையிலான, மொழி பிரச்னையில, இப்படி நடந்துடுத்து ஓய்...


''நல்லவேளையா, பெரிய விபத்து எதுவும் ஆகாம, கடைசி நேரத்துல கண்டுபிடிச்சு, ரயில்களை நிறுத்திட்டா... இந்த விவகாரத்துல, ரெண்டு ஸ்டேஷன் மாஸ்டர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்னு மூணு பேரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டா ஓய்...


''அதோட, மதுரை ரயில்வே கோட்ட இயக்க மேலாளர் பிரேம்குமாரை, திருச்சிக்கு துாக்கியடிச்சுட்டா... இவர், ரயில்களை கையாள்றதுல கெட்டிக்காரராம்... இதுக்காக, போன வருஷம், அகில இந்திய அளவுல, ஒன்பதாவது இடத்துக்கும், தெற்கு ரயில்வே அளவுல, முதல் இடத்துக்கும் வந்து, விருதும் வாங்கினார்...


''அவருக்கு கீழே இருக்கறவா பண்ணின தப்பால, நல்ல அதிகாரியையும் பலிகடா ஆக்கிட்டாளேன்னு, கோட்ட ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''கல்லா கட்டுற, எஸ்.ஐ.,யை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு வந்த அன்வர் பாயே தொடர்ந்தார்...


''கடலுார் மாவட்டம், பெண்ணாடத்துல இருக்கிற ஒரு, எஸ்.ஐ., அங்கே இருக்குற, சிறப்பு, எஸ்.ஐ., உதவியோட, ராத்திரி நேரத்துல, வசூல் வேட்டையில இறங்குறார்...


''லாட்டரி, பார், மணல் கடத்தல், சூதாட்ட கும்பல்னு, பல தரப்புலயும், பக்காவா வசூல் வேட்டை நடத்துறாரு பா...


''சமீபத்துல, வெள்ளாத்துல மணல் கடத்துன, அஞ்சு மாட்டு வண்டிகளை பிடிச்சவர், ஒரு வண்டியை மட்டும் வழக்கு போட்டு, கணக்குல காட்டிட்டு, மத்த வண்டிகளில, 'லம்ப்'பா, ஒரு தொகையை கறந்துட்டாராம்...


''இவரோட வண்டவாளங்கள் எல்லாம் தெரிஞ்சும், எஸ்.ஐ.,யும், தனிப்பிரிவு ஏட்டும், கண்டும் காணாம இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.


''சீனிவாசன், ராதாகிருஷ்ணனை தேடிட்டு இருந்தீரே... அதோ வரார் பாரும்...'' என, நண்பரிடம் சுட்டிக்காட்டிய குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Darmavan - Chennai,இந்தியா

 • chitravel - mahe,செசேல்ஸ்

  சரியான தகவல்களை பதிவிடவும் ...இது நேற்றைய பதிவு.

 • A R J U N - ,இந்தியா

  ..'லம்ப்'பா, ஒரு தொகையை ,போலீஸ்காரர்கள் இப்படி ஒழுகீனமாக நடந்து கொள்வதால் எங்கும் ஊழல்-எதிலும் ஊழல் என்றாகிவிட்டது...DGP COMMISSIONER லெவலிலாவது ஒழுக்கம் இருக்கா தெரியவில்லை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மேலிடத்துக்கு தரவேண்டியதை மிகச்சரியாகக்கொடுத்துவிடுபவர்மீது எவ்விதணடவடிக்கையும் கிடையாதென்பதே எழுதப்படாதச்சட்டம்

 • R. SUBRAMANIAN -

  In Government service promotion of an employee is on the principle of seniority-cum-suitability,other than reservations However in so far as TN is concerned the principle ability to bribe overrides seniority/suitability etc.,

Advertisement