Advertisement

புதுப்பாளையத்தில் புதிய ஸ்டேஷன்: சிக்கு புக்கு ரயிலே...!

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில்,' ஷீரம்தான் ' திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புத் தொகை செலுத்தி, புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கி, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே காலை, மாலை மட்டும் இயங்கி வந்த பாசஞ்சர் ரயில் கடந்த, 2010 முதல் அன்றாடம் நான்கு முறை இயக்கப்படுகிறது. கடந்த, 2015 முதல் இப்பாதை மின்மயமாக்கம் செய்யப்பட்டதால், பாசஞ்சர் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.முதலில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும் பயணிகள் ஏற்றி, இறக்கி வந்த நிலைமாறி, தற்போது, துடியலுார் ரயில்வே ஸ்டேஷனிலும், பயணிகளை ஏற்றி இறக்கி வருகிறது. பஸ் பயணத்தை விட குறைந்த கட்டணம் என்பதால், அன்றாடம் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், விபத்தை தவிர்க்கவும் ரயிலில் பயணம் செய்யும்படி பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில், புதுப்பாளையத்தில் இயங்கி வந்த ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தரப்பு மக்கள் ரயில்வே துறையிலுள்ள 'ஷீரம்தான்' திட்டத்தின் கீழ், ரயில்வே துறைக்கு, ஸ்டேஷன் அமைப்பதற்கு பங்களிப்புத் தொகையை செலுத்தி, எப்படியாவது புதுப்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கி, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாசஞ்சர் ரயிலை நிறுத்தவும் வாய்ப்புஇது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில்,'' 'ஷீரம்தான்' திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை பொதுமக்களின் பங்களிப்பாக செலுத்தினால், ரயில்வே துறையின் சட்ட, திட்டங்களுக்குட்பட்டு ரயில்வே ஸ்டேஷன் அமைக்கவும், பாசஞ்சர் ரயிலை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சிகளை பாகுபாடுகளை மறந்து மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்,''என்றார்.
பாதுகாப்பானது ரயில் பயணம் இது குறித்து, நரசிம்மநாயக்கன் பாளையம் பொதுமக்கள் கூறியதாவது, 'நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பூச்சியூர், புதுப்பாளையம், ராக்கிபாளையம் மற்றும் அதைச்சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போர் மேட்டுப்பாளையம் செல்ல மேட்டுப்பாளையம் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்துகளும் அதிகரித்து விட்டன. இப்பிரச்னைக்கு தீர்வு காண கடந்த,45 ஆண்டுக்கு முன் புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அமைக்க வேண்டும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து குறைவதோடு, மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement