Advertisement

வீதியில் கிடக்கிறது தேர்தல் விதி :கலெக்டரய்யா... இது நியாயமா?

கோவை:தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, அரசு விழாக்கள் நடத்தக்கூடாது. அதை கண்டுகொள்ளாமல், அவசரகதியில் கோவையில் அரசு பொருட்காட்சி நேற்று துவக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் உள்ளிட்டோரே பங்கேற்ற இந்த பொருட்காட்சி, அரசியல் கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, கடந்த 18ல் நடந்தது; ஓட்டு எண்ணிக்கை மே 23ல் நடக்க இருக்கிறது. சூலுார் எம்.எல்.ஏ., கனகராஜ் இறந்ததால், மே 19ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், இன்னும் தளர்த்தப்படவில்லை.
அரசு விழாக்களுக்கு நோ!தேர்தல் நடைமுறைகளை தேர்தல் கமிஷன் விலக்கிக் கொள்ளும் வரை, அரசு விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது. அதனால், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கூட நடத்தப்படுவதில்லை.இச்சூழலில், செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில், கோவை காந்திபுரத்தில், சிறைத்துறை மைதானத்தின் ஒரு பகுதியில், நேற்று அரசு பொருட்காட்சி துவங்கியது. செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு துறை அரங்குகள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. தனியார் நிறுவன ஸ்டால்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. கேளிக்கை விளையாட்டுகளும், இன்னும் முழுமையாக வைக்கப்படவில்லை. அதற்குள் அவசரப்பட்டு, துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது.
இதுதான் நோக்கம்தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை சமயத்தில், அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.ஒவ்வொரு அரசு துறை சார்பிலும், அரங்குகள் அமைக்கப்பட்டு, இதுவரை செய்த பணிகள், சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.
சிறந்த அரங்கு அமைக்கும் துறைக்கு விருது வழங்கப்படும்.அரசு துறை அரங்குகளை மட்டும் பார்க்க, பொதுமக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதற்காக, கலையரங்கம் அமைத்து, தினமும் கலைநிகழ்ச்சி நடத்தப்படும். குழந்தைகளை கவர்வதற்காக, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இதில், அரசின் நோக்கம், சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதே. அதன் காரணமாகவே, அரசு துறை அரங்குகளுக்கு, அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், சமீபகாலமாக வணிக நோக்கமாக மாற ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, அரங்குகள் தயாராகாத நிலையிலும், அவசரகதியில், பொருட்காட்சியை துவக்கியிருப்பது, வணிக நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
அரசின் சாதனைகள் எங்கும் விளக்கப்படவில்லை. திட்டங்களை மட்டுமே மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுதொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்க, தேவையான ஆதாரங்களை சூலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், எதிர்க்கட்சியினர் திரட்டி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, அரசு விழா நடத்தக்கூடாது. துவக்க விழாவில், மாவட்ட தேர்தல் அதிகாரி கலந்திருக்கிறார். அவரே, தேர்தல் பணிக்கு முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கப்படும்' என்றனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணியிடம் கேட்ட போது, ''தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அரங்குகளில், அரசின் சாதனைகள் இடம் பெறாது,'' என்றார்.அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லாதபோது, பொருட்காட்சி நடத்துவது பொருளீட்டத்தானா? அது, அரசின் வேலையல்லவே!தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, அரசு விழா நடத்தக்கூடாது. துவக்க விழாவில், மாவட்ட தேர்தல் அதிகாரி கலந்திருக்கிறார். அவரே, தேர்தல் பணிக்கு முழுப்பொறுப்பு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement