Advertisement

போலீஸ் டைரி..,.,.

மாமனாரை குத்திய மருமகன் கைது
ஆவடி: ஆவடி, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர், கார்த்திகேயன், 24; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஷ்வரி, 20. தம்பதிக்கு, ஒரு மகன் உள்ளார். கார்த்திகேயன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளான். ராஜேஷ்வரியின் தந்தை கிருஷ்ணன், 50, அண்ணன் ரமேஷ், 21, ஆகியோர் தட்டி கேட்டனர். ஆத்திரத்தில் கார்த்திகேயனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.பதிலுக்கு, கார்த்திகேயன், மனைவி, மாமனார், மச்சான் ஆகியோரை, கத்தியால் குத்தினான். விசாரித்த ஆவடி போலீசார், இரு தரப்பு புகாரின் அடிப்படையில், கார்த்திகேயன், கிருஷ்ணன், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் ஒருவன் கைது
ஜாம்பஜார்: போரூர், ரங்கநாதன் நகரைச் சேர்ந்தவர், மணிவண்ணன், 27. அவர், சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். சுபஸ்ரீயிடம், அவரது பெற்றோர், சகோதரர் என, யாரும் பேசுவதில்லை. இந்நிலையில், 18ம் தேதி, மணிவண்ணன், தன் மனைவி சுபஸ்ரீயுடன், திருவல்லிக்கேணி, சூரப்பா தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற, திருமண விழாவிற்கு சென்றார். அங்கு வந்த சுபஸ்ரீயின் சகோதரர், சாய்சங்கர், 21, என்பவன், இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கினான். ஜாம்பஜார் போலீசார், நேற்று சாய்சங்கரை கைது செய்தனர்.
சூதாடிய ஒன்பது பேர் கைது
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மாளம்மன் கோவில் தெரு பகுதியில், போலீசார் கண்காணிப்பின் போது, ராயபுரத்தைச் சேர்ந்த அழகர், 37, திருவொற்றியூரைச் சேர்ந்த ஸ்ரீ வேல், 40, காலடிப்பேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 38, உள்ளிட்ட ஒன்பது பேர், பணம் வைத்து சூதாடியதாக தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 19 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சைக்கிள் திருடன் கைது
அசோக்நகர்: அசோக்நகரைச் சேர்ந்தவர், சுரேஷ், 40. நேற்று முன்தினம் காலை, எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெருவில் உள்ள கடைக்கு, சைக்கிளில் சென்றார். பொருட்கள் வாங்கும் போது, அவரது சைக்கிளை திருட முயன்ற, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, முகமது பாஷா, 40, என்பவனை, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், பல்வேறு இடங்களில், சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, நேற்று காலை, அவனை கைது செய்த போலீசார், 8 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ ஓட்டுனரிடம் பணம் பறிப்பு
அமைந்தகரை: சூளைமேடு நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர், பாரி, 36; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை மேம்பாலம் அருகே, ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கத்தி முனையில், மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்துச் சென்றனர். அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
அரும்பாக்கம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், கோமதி, 54. நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகே உள்ள மளிகைக் கடைக்கு சென்றார். பின், வீடு திரும்பிய போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது, 1 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்டவன் கைது
புளியந்தோப்பு: திரு.வி.க.நகரைச் சேர்ந்தவன், இம்ரான், 32. இவன், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், வழிப்பறி, அடிதடியில் ஈடுபட்டு வந்தான். இவன் மீது, கொலை முயற்சி உட்பட, 18 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில், பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவன், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட துவங்கினான். அஜித் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில், புளியந்தோப்பு போலீசார், நேற்று, இம்ரானை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அழகு நிலையத்தில் திருட்டு
பட்டாபிராம்: திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர், வேலுபாபு, 42. பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே, அழகு நிலையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்ற ஊழியர்கள், நேற்று காலை கடை திறக்க சென்ற போது, 'ஷட்டர்' உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த, 50 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் திருடன்கள் கைது
ஏழுகிணறு: ஏழுகிணறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை, நேற்று மதியம், மர்ம நபர் ஒருவன் திருட முயன்றபோது, பொதுமக்கள், அவனை மடக்கி பிடித்து, ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த நாசர், 45, என்பதும், இதுவரை, 13 பைக்குகள் திருடியதும் தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார், 13 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, திருமலைப்பிள்ளை சாலையில், நேற்று காலை, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, இருவரை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், ஓட்டேரியைச் சேர்ந்த, டேவிட், 20, சந்தோஷ், 22, என்பதும், இருசக்கர வாகன திருடர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement