Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நடுநிலையா பேசி இருக்கீங்க... மிக்க நன்றி...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் அறிக்கை:கருத்து சுதந்திரம் என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகங்களையோ, தனி நபர்களையோ குறி வைத்து, சமூக வலைதளங்களில் இழிவு பிரசாரம் செய்யப்படுவதை, முற்றிலுமாக தடுப்பதற்கு, காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும், அதற்கான சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதிலும், ஜாதி, மதத்தின் அடிப்படையில் பரப்பப்படும் அவதுாறுகளை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழக, காங்., தலைவர், அழகிரி பேட்டி: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள், பெரும் பணத்தை, மக்களின் கையில் திணித்து, யாருக்கு ஓட்டு அளிப்பது என்பதை, மனதளவில் தீர்மானிக்க முடியாமல், திக்கு முக்காடச் செய்துள்ளன. இதை, தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் வேடிக்கை பார்த்தது. உலக அரசியலில், ஹிட்லரும், முசோலினியும் எப்படி தேர்தலை சந்தித்து, மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினரோ, அதே முறையை கையாண்டு, மோடி, தேர்தலை சந்தித்து வருகிறார்.


இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் பேட்டி: இலங்கையில் தொடர்ச்சியாக இனப் படுகொலை நடந்து கொண்டிருப்பது, உலக அளவில் கவலை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் திருந்தவில்லை என்பதை, மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. அதனால், அந்த அரசுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி பேச்சு: லோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வோ, காங்கிரசோ, புதிய அரசை அமைக்கப் போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து, புதிய அரசை அமைப்போம். இதற்காகவே நாங்கள், ஐக்கிய இந்திய முன்னணியை அமைத்து இருக்கிறோம். மோடி அரசை, நாங்கள் வெளியேற்றுவோம்.


ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர், ராம.கோபாலன் அறிக்கை: ஹிந்து முன்னணி,அரசியல் கட்சி அல்ல; ஹிந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாசார அமைப்பு; ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் இயக்கம்; ஹிந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் வாதாட, போராட, பரிந்து பேசும் இயக்கம். மக்களைப் பிரித்து, ஜாதி மோதலை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும், ஹிந்து முன்னணி எதிர்த்து போராடும். ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமையே வலிமை, தேசத்தின் பாதுகாப்பு. இதில், எந்த சமரசத்திற்கும் இடமில்லை. எனவே, ஹிந்து முன்னணியின் மீது அவதுாறு பரப்பப்படுவதை, போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement