Advertisement

ஏற்காடு, ஊட்டியில் கோடைமழை!

சேலம் : தமிழகத்தில் நேற்று மாலை, ஏற்காடு, ஊட்டி மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவையில் காந்திபுரம், ரயில்நிலையம், உப்பிலிபாளையம்,ராமநாதபுரம் மற்றும் உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது.

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில்,திடீரென பெய்த மழையால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல, சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்த நிலையில், இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.

ஏற்காடு ஏரி பகுதி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல, ஊட்டியில் பெய்த மழையால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, பிங்கர்போஸ்ட், ஊட்டிகுன்னூர் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஷேரிங் கிராஸ் பகுதியில் தண்ணீர் தேங்கியது. பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் அதிகளவில் சென்றது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த பயணிகள் மழையில் நினைந்தபடி மகிழ்ந்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில், சுமார் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி, நஞ்சநாடு, பாலாடா, கேத்தி, தலைகுந்தா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement