Advertisement

ரெடி! மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்...நவீன கண்காணிப்பு மையம் அமைப்பு

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், அமைதியான முறையில் தேர்தல் நடத்திட முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 167 ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கடலுார் மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 9 சட்டசபை தொகுதிகளில், 2,300 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில், ஆயிரத்து 166 ஓட்டுச்சாவடிகளில், வெப் - கேமராக்கள் பொருத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 167 ஓட்டுச்சாவடிகள் மற்றும் மிக பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள நான்கு ஓட்டுச்சாவடிகள் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, இருப்பு அறையில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் மூலம், அந்தந்த ஓட்டுப்பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை, ஜி.பி.ஆர்.எஸ்., கருவி உதவியுடன், கண்காணிப்பு மைய கம்ப்யூட்டரில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, ஏதேனும் பிரச்னைகள் உருவானால், அதனை கண்காணிப்பதற்கும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், போலீசாரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுப்பதிவு மையங்கள் அனைத்தும், கலெக்டர் அலுவலக கண்காணிப்பு மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் நேரடியாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
கலெக்டர் அன்புச்செல்வன் கூறுகையில் 'கடலுார் மாவட்டத்தில், அமைதியாகவும், நேர்மையான முறையிலும் தேர்தல் நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின்போது, பிரச்னை ஏற்பட்ட ஓட்டுச்சாவடிகள், ஒரே கட்சிக்கு மிக அதிக ஓட்டுகள் பதிவான ஓட்டுச்சாவடிகள் மற்றும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.பொதுமக்கள் அனைவரும் ஓட்டினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement