Advertisement

'கண்ணாமூச்சி ரே ரே...!

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ள நிலையில், அதை தடுக்க, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையிலான, கண்ணாமூச்சி விளையாட்டில், வெல்லப் போவது யார் என்பது, இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும். இதிலும், பொது மக்கள் ஆதரவு யாருக்கோ, அவர்களுக்கே வெற்றி.


தேர்தலில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கும் பழக்கம், நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இது மறைமுகமாகவே இருந்தது. மிகவும் பின்தங்கிய மக்களை கவர, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், 2009ல், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., பாரபட்சமின்றி, அனைவருக்கும் பணம் வழங்கி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மாநிலம் முழுவதும், '144!'இது, 'திருமங்கலம் பார்முலா' என்ற தனி வழியை, அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் நடந்த, அனைத்து இடைத்தேர்தலிலும், பணமே பிரதானமானது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, அனைவரும், வாக்காளர்களை கவர, பணம் வழங்கத் துவங்கினர். இது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2014 லோக்சபா தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின், பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, முதன் முறையாக, மாநிலம் முழுவதும், '144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சியினர் முடங்க, போலீசார் உதவியுடன், ஆளுங்கட்சியினர், ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் கொடுத்தனர். அந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்து, 2016 சட்டசபை தேர்தலிலும், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதையும் மீறி, பணப் பட்டுவாடா நடந்தது. அதிக அளவில் பட்டுவாடா நடந்த, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகள் என்ற பெயர் கிடைத்தது.


இது, தேசிய அளவில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. ஆனால், அரசியல் கட்சிகளோ, வாக்காளர்களோ, கொஞ்சமும் கவலைப்படவில்லை. சமீபத்தில் நடந்த, சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இதில் புதிய வரலாறு படைத்தது. பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நடந்தபோது, சுயேச்சையாக போட்டியிட்ட, தினகரன் வெற்றி பெற்றார். அவர், 20 ரூபாய், 'டோக்கன்' கொடுத்து, தேர்தல் முடிந்த பின், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. ஒவ்வொரு முறையும், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு முயற்சிகள் எடுப்பதும், அவை தோல்வியில் முடிவதும் தொடர்கிறது.


இப்போதைய தேர்தலிலும், தேர்தல் ஆணையம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும், தேர்தல் செலவினம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு செலவின பார்வையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்து, உடனடியாக செல்வதில் தாமதமாவதை தவிர்க்க, மாவட்டந்தோறும் வருமான வரித் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

கெடுபிடியெல்லாம், 'ஜுஜுபி!'அவர்கள் வாகனத்தில், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் சோதனையை, கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு, அதிகபட்சமாக, 183 கோடி ரூபாய் ரொக்கம், 1,000 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் புகார் அளிக்க, 'சி விஜில்' எனும், 'மொபைல் ஆப்' செயலி, கட்டணமில்லா டெலிபோன் எண், '1950' ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தாண்டி, பணப் பட்டுவாடா செய்ய, அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இம்முறை லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளின் வெற்றி, ஆட்சி நீடிக்குமா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, அந்தத் தொகுதிகளில், கூடுதல் கவனிப்பு இருக்கும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் கொடுப்பதை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்வது போல, மக்கள் வாங்குவதை தடுக்க, பணம் கொடுத்தவர் மட்டுமின்றி, வாங்கியவர் மீதும் வழக்கு பதிவு செய்ய, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு பணம்:வழக்கு பதியப்பட்டால், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். எனவே, இம்முறை, மக்கள் பணம் வாங்க தயங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யாருக்கும் தெரியாமல், தேர்தல் ஆணையம் குறித்து கவலைப்படாமல், மக்களுக்கு பணம் வழங்க, அரசியல் கட்சியினர் தயாராகி விட்டனர். அதை தடுக்க, தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளது. இதில், வெல்லப் போவது யார் என்பது, இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். பொது மக்கள் ஒத்துழைப்பு, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே இதிலும் வெற்றி வாய்ப்பு அதிகம்!


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Boopathi Subramanian -

  இன்றும் நாளையும் தெரிந்து கொள்ளலாம்

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  தேர்தல் ஆணையத்துக்கு வேலை செய்பவர்கள் அரசு அதிகாரிகள் தான். அவர்களிடமும் கட்சி சார்பு நிலை உள்ளது.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் திருமங்கலத்தில் அஞ்சாநெஞ்சன் பெரிய அளவில் ஆரம்பித்தது இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு போயுள்ளது தமிழகம் எல்லாத்துக்கும் முன்னோடி என்று பெருமைகொள்வோமாக

 • natarajan s - chennai,இந்தியா

  மக்கள் பிரதிநிதி சட்டம் மாற்றப்பட வேண்டும். பணம்கொடுப்பவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டி இட தடை அவரை நிறுத்திய கட்சிக்கும் தடை இதுதான் பயனளிக்கும்

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  இறுதியில் வெல்ல போவது அரசியல் கட்சிகள் தான்...ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளே எல்லாம் ...பிரதமர் முதல் ஆண்டிவரை நிர்ணயிப்பது அரசியல் கட்சிகளே ....எல்லா அரசியல் கட்சிகளும் அயோக்கியர்களே....சந்தற்பவாதிகளே...பணம் அவரவர் சட்டை பையில் கச்சிதமாக உட்காரும் . பணம் கொடுக்கும் விடியோவை மறைமுகமாக படம் பிடித்து வார்டு வாரியாக வெளியிட்டால் பார்க்க சுவாரசியமாக இருக்கும் .

Advertisement