Advertisement

அமைச்சரை காக்க வைத்து, டென்ஷன் ஆக்கிய கார்த்திக்!

''கணிக்க முடியாம, உளவுத்துறை போலீசார் திணறுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''தேர்தல் முடிவுகளையா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமா... லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு சம்பந்தமா, உளவுத்துறை போலீசார் சர்வே எடுக்காவ... ஆனா, மாவட்ட அளவுல, உளவுத்துறையில, போலீசார் எண்ணிக்கை குறைவா இருக்கிறதால, ரொம்பவே சிரமப்படுதாவ வே... ''பொதுவா, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் நெருங்கிப் பழகும் உளவுத் துறையினர், அவங்க மூலமாகவே, கட்சியின் முக்கால்வாசி ரகசிய செயல்பாடுகளை தெரிஞ்சுக்குவாவ... ''ஆனா, அ.ம.மு.க., நிர்வாகிகள், உளவுத் துறை போலீசாரிடம், உஷாராவே இருக்காவ... இதனால, ஒவ்வொரு தொகுதியிலயும், அவங்க, எவ்வளவு ஓட்டுகளை பிரிப்பாங்கன்னு தெளிவா கணிக்க முடியாம, உளவுத் துறை போலீசார், திணறிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''பாரதியார் கவிதைகளை படிச்சு, மனசை தேத்திக்கிறாருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு சென்றார் அந்தோணிசாமி.

''யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., மருத்துவர் அணியின், மாநில தலைவர் மைத்ரேயன் தான்... இவர், தென்சென்னை அல்லது திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு, 'சீட்' கேட்டும், கிடைக்கலைங்க... ''இவர், ராஜ்யசபா, எம்.பி., நிதியில, தென் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, நிறைய வளர்ச்சி பணிகளை செய்து குடுத்திருக்காருங்க... அதனால, காஞ்சிபுரம் மாவட்டத்துல உள்ள ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள்ல இருக்கிற ஆளுங்கட்சிக்காரங்க, மைத்ரேயனை, பிரசாரத்துக்கு கூப்பிட்டு இருக்காங்க... ''ஆனா, 'சீட்' கிடைக்காத விரக்தியில, வீட்டுலயே உட்கார்ந்து, பாரதியார் கவிதைகளை படிச்சு, மன வேதனையை தீர்த்துட்டு இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''வழக்கம் போல, வேலையை காட்டிட்டாராம் பா...'' என, கடைசி விஷயத்தை கையில் எடுத்தார், அன்வர்பாய்.

''யாரைச் சொல்றீங்ணா...'' எனக் கேட்டார் கோவை, கோவாலு.

''மதுரை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரிச்சு, சமீபத்துல, நடிகர் கார்த்திக், கீரைத்துறையில, சாயந்தரம், 5:30 மணிக்கு பிரசாரம் செய்வார்னு அறிவிச்சு இருந்தாங்க... இதுக்காக, கட்சிக்காரங்க, 4:00 மணிக்கே, கூட்டத்தை திரட்டியிருந்தாங்க பா... ''சாயந்தரம், 5:45 மணிக்கு அமைச்சர் ராஜு, எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் எல்லாரும் வந்துட்டாங்க... கார்த்திக் தங்கியிருந்த ஓட்டலுக்கு போன் போட்டு, அவரது உதவியாளரிடம் பேசியிருக்காங்க பா...

''அதுக்கு, 'அண்ணன் குளிக்க போயிருக்கார்... கொஞ்ச நேரத்துல வந்துடுவார்'னு சொல்லி இருக்கார்... இப்படி சொல்லிச் சொல்லியே, ராத்திரி, 7:00 மணியாகிடுச்சு பா... ''வெறுத்து போன அமைச்சர் ராஜு, 'சீக்கிரம் வரச் சொல்லுங்கப்பா... நேரமாகுது'ன்னு, 'டென்ஷன்' ஆயிட்டாராம்... ஒருவழியா, 7:15 மணிக்கு வந்த கார்த்திக், 'ஒரே டிராபிக் ஜாம்... மன்னிச்சுக்குங்க'ன்னு, 'சிம்பிளா' சொல்லிட்டு, பேச ஆரம்பிச்சிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

அரட்டை முடியவும், அனைவரும் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கார்த்திக் எல்லாம் பெரிய ஆள்னு நினைச்சா அப்படிதான்

Advertisement